பேமிலி சப்ஜெக்ட் படங்களையே விசு அதிகமா எடுக்க என்ன காரணம்? அடடா... ரொம்ப கூலா சொல்லிட்டாரே...!
நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் விசு. இவர் பெரும்பாலும் குடும்பப்பாங்கான படங்களையே எடுப்பார். இவரது கதை தான் இவரது படத்துக்கு முதல் ஹீரோ. அதனால் இவர் யாரை நடிகராகப் போட்டு நடிக்க வைத்தாலும் அந்தப் படம் சூப்பர்ஹிட் அடித்து விடும்.
கதையில் பல முடிச்சுகளைப் போட்டு பல டுவிஸ்ட்களை வைத்து அதை ஒவ்வொன்றாக அவிழ்ப்பதில் இவர் கில்லாடி. படத்தில் ஒவ்வொரு காட்சியும் டர்னிங் பாயிண்டாகத் தான் இருக்கும். சம்சாரம் அது மின்சாரம் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்தைப் பார்க்காமல் வெறும் ஒலிச்சித்திரமாகவே கேட்கலாம்.
அவ்வளவு சுவாரசியமாக இருக்கும். 80ஸ் குட்டீஸ்களைக் கேட்டால் தெரியும். அந்தக் காலத்தில் எங்கு பார்த்தாலும் இந்த ஒலிச்சித்திரம் தான் ஒலிக்கும். படத்தின் கதை அவ்வளவு வலுவானது. படத்தில் விசுவுடன் இணைந்து ரகுவரன், கிஷ்மு, மனோரமா உள்பட பலர் நடித்து இருந்தனர்.
படம் திரையிட்ட இடங்கள் எல்லாம் திருவிழா கூட்டம் தான். குறிப்பாக பெண்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து குவிந்து விடுவார்கள். விசு படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்காது. ஆபாசம் துளியும் இருக்காது என்பதால் குறிப்பாகத் தாய்மார்களின் கூட்டம் அலைமோதும். அதனால் அவரது படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.
மணல் கயிறு, குடும்பம் ஒரு கதம்பம், டௌரி கல்யாணம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, காவலன் அவன் கோவலன், சிதம்பர ரகசியம், சகலகலா சம்மந்தி, வரவு நல்ல உறவு, வேடிக்கை என் வாடிக்கை, உரிமை ஊஞ்சலாடுகிறது, பட்டுக்கோட்டை பெரியப்பா, வா மகளே வா, நீங்க நல்லா இருக்கணும், மீண்டும் சாவித்திரி ஆகிய விசு இயக்கிய படங்களை மட்டும் பாருங்கள்.
உங்களுக்குள் ஒரு நல்ல குடும்பம் பற்றிய புரிதல் ஏற்படும். வீட்டிலும் சரி. உறவுகளிடமும் சரி. எந்தப் பிரச்சனை ஆனாலும் சுமூகமாகத் தீர்க்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து விடும். அந்த வகையில் விசுவிடம் யூடியூப் சேனல் ஒன்றில் ஒரு கேள்வி கேட்டார்கள். குடும்பப் பாங்கான படங்களை அதிகமாக எடுக்க என்ன காரணம் என்று. அதற்கு அவர் அளித்த பதில் சுவாரசியமாக இருந்தது. இதுதான் அது.
ஒண்டுக்குடித்தனத்துக்கு ரொம்ப புகழ் பெற்றது திருவல்லிக்கேணி. அதுல 25 வருஷம் வாழ்ந்தது தான். நிறைய குடும்பங்களை அங்கே சந்திச்சிருப்போம். பல கேரக்டர்களை சந்திச்சிருப்போம். எனக்கு அதுல ஒரு வினோதமான கற்பனை ஏற்படும். இவரோட புருஷன் அந்தப் பொண்டாட்டி பொண்டாட்டியா இருந்தா என்ன? எதுக்கு சொல்றேன்னா இவர் ஒரு கேரக்டர். அவர் ஒரு கேரக்டர். இந்த இரண்டு கேரக்டரையும் முடிச்சுப் போட்டா என்ன? அப்படி எத்தனையோ கேரக்டர்ஸை முடிச்சுப் போட்டு நான் படம் எடுத்துருக்கேன்.
நான் ஒரு மாதிரி. என் மனைவி ஒரு மாதிரி இருப்போம். ஆனா எனக்கு வேறொரு மனைவி கிடைச்சிருந்தா எப்படி இருக்கும்? வேற ஒரு பார்முலாவை ட்ரை பண்ணியிருப்போம். திருவல்லிக்கேணியின் வாழ்க்கை தான், அங்குள்ள கேரக்டர்களை நான் உள்வாங்கியது தான் என் மனசுல அழுத்தமாகப் போச்சு. அதனால் தான் நிறைய குடும்பப்படங்கள் உருவாகக் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.