இசையமைப்பது மட்டுமே என் வேலை!.. நீதிமன்றத்தில் இளையராஜா சொன்னது இதுதான்!...

by சிவா |
இசையமைப்பது மட்டுமே என் வேலை!.. நீதிமன்றத்தில் இளையராஜா சொன்னது இதுதான்!...
X

Ilayaraja: தான் இசையமைத்த பாடல்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் வியாபாரரீதியில் எங்கேயும் பயன்படுத்தக்கூடாது என சில வருடங்களுக்கு முன்பே காப்புரிமை சட்டத்தின் கீழ் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இளையராஜா இசையமைத்த பாடல்களின் உரிமையை படங்களின் தயாரிப்பாளர் ஆடியோ நிறுவனத்திற்கு விற்பனை செய்திருப்பார்கள்.

குறிப்பிட்ட தொகையை கொடுத்து பாடல்களின் உரிமையை வாங்கும் ஆடியோ நிறுவனங்கள் முன்பெல்லாம் கேசட்டுகளில் பாடல்களை விற்பனை செய்து வந்தார்கள். அதன்பின் சிடி வந்தது. இப்போதெல்லாம் ஆன்லைனில் பல இணையதளங்களில் பாடல்கள் டவுன்லோட் செய்யப்படுகிறது. யுடியூப்பிலும் பாடல்களை பலரும் கேட்கிறார்கள்.

அந்நிலையில்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. திரைப்படங்களில் கூட தன்னுடைய பாடலை யாரேனும் பயன்படுத்தினால் நோட்டீஸ் அனுப்பினார். கண்மணி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்தி படமெடுத்த மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கும் அவர் நோட்டீஸ் அனுப்பினார்.

அவ்வளவு ஏன்?. அவரின் நெருங்கிய நண்பராக இருந்த மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தன்னிடம் அனுமதி வாங்காமல் இசைக்கச்சேரிகளில் தனது பாடல்களை பாடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பினார். இதனால், இளையராஜா பணத்தாசை பிடித்தவர் என்கிற இமேஜ் அவர் மீது விழுந்தது. அவரை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால், அதற்கெல்லாம் அவர் பதில் சொல்வதே இல்லை.

நான் எந்த செய்தியையும் பார்ப்பதில்லை. என்னை பற்றி திட்டுபவர்கள் திட்டிக்கொண்டே இருக்கட்டும். அதை நான் காது கொடுத்து கேட்பதில்லை என கூலாக சொன்னார். இந்நிலையில், மியூசிக் மாஸ்டர் என்கிற நிறுவனம் நீதிமன்றத்தில் ஒரு காப்புரிமை வழக்கை தொடர்ந்தது. அதில், இளையாராஜா இசையமைத்த 109 படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றை அவரின் மனைவி நடத்திய இசை நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளோம். எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் யுடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார்கள்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது இளையராஜா நேரில் வந்து வாக்குமூலம் அளித்தார். அப்போது அவரின் வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அவர் ‘இசையமைப்பது மட்டுமே என் வேலை. இசை மீதான ஆர்வத்தால் ஆடம்பர வாழ்க்கையில் எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை. எனவே, எந்த பொருட்களை, சொத்துக்களை எப்போது வாங்கினேன் என்பது எனக்கு தெரியாது. திரைப்படங்களில் இசையமைக்கும்போது இயக்குனர்களுடன் மட்டுமே நான் பேசுவேன். தயாரிப்பாளர்களுடன் எனக்கு தொடர்பு இல்லை. எனவே, எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு சொந்தமாக அலுவலகமோ, ஸ்டுடியோவோ இல்லை. எனக்கு பெயர், புகழ், செல்வம் எல்லாமே சினிமாதான் தந்தது’ என சொல்லியிருக்கிறார்.

Next Story