அமெரிக்கா செல்ல ஷங்கருக்கு விசா கொடுத்த அந்த மேஜிக் பாடல்!... அடடா!.
பிரமாண்ட இயக்குநர் முதல்முறையாக அமெரிக்கா போக முயற்சி செய்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருக்கிறது. அது என்ன என்று இப்போது நாம் பார்க்கலாம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த ஷங்கர், சிறுவயது முதலே நடிகராக வேண்டும் என்று கனவு கண்டவர். இவரும் இவரது நண்பர்களும் இணைந்து போட்ட நாடகத்தை எதேச்சையாகப் பார்த்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், உதவி இயக்குநர் வாய்ப்பளிக்கவே அவருடன் பயணிக்கத் தொடங்கினார். ஆரம்பகாலத்தில் எஸ்.ஏ.சி இயக்கிய வசந்த ராகம் மற்றும் சீதா ஆகிய படங்களில் ஒன்றிரண்டு காட்சிகளில் நடிக்கவும் செய்தார். அதன்பிறகு எஸ்.ஏ.சி இந்தியில் இயக்கிய ஜெய் சிவ்சங்கர் படத்தில் அசிஸ்டண்டாக இருந்து டைரக்ஷன் பக்கம் திரும்பினார்.
1993-ல் அர்ஜூன் - மதுபாலா நடித்த ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் பிளாக்பஸ்டர் சூப்பர்ஹிட்டாகவே வெற்றிகரமான இயக்குநராக அறியப்பட்டார். அதன்பின்னர், பிரபுதேவா - நக்மா ஜோடியை வைத்து இவர் எடுத்த காதலன் படம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் வெற்றிநடை போட்டு ஷங்கரை பிரமாண்ட இயக்குநராக்கியது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதலன் படத்தின் பாடல்கள் அன்றைய வைரல் சென்சேஷனாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக முக்காபுல்லா பாடலும் அதில் பிரபுதேவாவின் வித்தியாசமான நடனமும் பரபரப்பாக அந்த காலகட்டத்தில் பேசப்பட்டது. முக்காபுல்லா பாடலின் பாப்புலாரிட்டிக்கு இன்னொரு சம்பவத்தையும் நாம் உதாரணமாகச் சொல்லலாம்.
காதலன் ரிலீஸுக்குப் பிறகு முதல்முறையாக ஷங்கர் அமெரிக்கா செல்ல முயற்சி செய்திருக்கிறார். அப்போது விசாவுக்கு இவர் விண்ணப்பிக்கவே, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு இவரை அழைத்திருக்கிறார்கள். அங்கே இருந்த ஒரு பெண் அதிகாரி, என்ன வேலையாக அமெரிக்கா செல்கிறீர்கள், எத்தனை நாள் பயணம் உள்ளிட்ட பல கேள்விகளை இவரிடம் அடுக்கியிருக்கிறார்.
எல்லா கேள்விகளுக்கும் ஷங்கர் பதிலளித்தும், அவர் அமெரிக்கா செல்வதற்காகச் சொன்ன காரணம் அந்த பெண் அதிகாரிக்கு திருப்திகரமாக இல்லையாம். ஷங்கரும் எவ்வள்வோ சொல்லியும் அந்த அதிகாரி ஒப்புக்கொள்ளவில்லையாம். அந்த சூழ்நிலையில் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரி அங்கு வந்திருக்கிறார்.
ஷங்கரைப் பார்த்ததும் நலம் விசாரித்துவிட்டு, அந்த பெண் அதிகாரியிடம் இவர்தான் முக்காபுல்லா பாடல் இடம்பெற்ற காதலன் படத்தின் டைரக்டர் என்று அறிமுகப்படுத்தினாராம். இதைக்கேட்டு ஆச்சர்யப்பட்ட அந்த பெண் அதிகாரி, முக்காபுல்லா டைரக்டருக்கு விசா இல்லைனு சொல்வேனா என்று சொல்லி உடனடியாக விசா விண்ணப்பத்தை ஓகே செய்து அனுப்பி வைத்தாராம். இதை இயக்குநர் ஷங்கரே ஒரு மேடையில் பகிர்ந்திருந்தார்.