விஜயின் ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனம் துவங்கிவிட்டது. இந்த டிசம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் படத்தின் செகண்ட் சிங்கிள், புது போஸ்டர், இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் என களைகட்டப் போகிறது.
இதில் முக்கியமாக டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் பிரம்மாண்டமான வகையில் பத்தின் ஆடியோ லான்ச் மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. ஒருபக்கம் ஜனநாயகன் படத்தின் வியாபாரமும் சூடு பிடித்திருக்கிறது. படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமையை ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் 115 கோடி விலை பேசி 20 கோடி வரை அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம். ஆனால் மீதி தொகையை சொன்ன தேதியில் அவரால் தயார் செய்து கொடுக்க முடியவில்லை. எனவே இப்படத்தை தயாரிக்கும் கேவின் நிறுவனம் நான்கைந்து வினியோகஸ்தர்களுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்து விட்டது.

இதில் கோபமடைந்த ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் ஒரு நாளைக்கு 5 கோடி, அடுத்த நாள் 10 கோடி, அடுத்த நாள் சில கோடிகள் என தொடர்ந்து பணத்தை அனுப்பிக்கொண்டே இருந்திருக்கிறார். மேலும், ‘உங்களிடம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறேன். எனக்குதான் ஜனநாயகன் படத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். நான் பணம் சரியான நேரத்தில் கொடுக்கவில்லை என காரணம் சொல்லி நீங்கள் மற்றவர்களிடம் கொடுத்தால் அது எனக்கு அவமானம்’ என கேவிஎன் நிறுவனத்திடம் சொல்லியிருக்கிறார்.
கேவிஎன் நிறுவனமோ ‘கேரளா உரிமை 15 கோடிக்கு கொடுத்து விடுகிறோம். மீதி 5 கோடியை திருப்பி கொடுத்துவிடுகிறோம்’ என சொல்லியும் அவர் கேட்கவில்லையாம். ‘நான் வட்டிக்கு வாங்கி பணம் கொடுத்துள்ளேன். நீங்க பணத்தை அப்படியே திருப்பி கொடுப்பதை ஏற்க முடியாது’ என சொல்கிறாராம். தற்போதுள்ள நிலவரப்படி கொடுத்த தொகையை விட 20 கோடி சேர்த்து கேட்போம்.. இல்லையென்றால் சென்னை சிட்டி மற்றும் செங்கல்பட்டு ஆகிய உரிமைகளை வாங்கிக் கொள்வோம் என ராகுல் திட்டமிட்டிருக்கிறாராம். இந்த விவகாரம் கேவிஎன் நிறுவனத்திற்கு தலைவலியை கொடுத்திருக்கிறது. விரைவில் பேசி ஒரு முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் பட தயாரிப்பாளருக்கு குடைச்சல் கொடுக்கும் இந்த ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்த நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பாளர் என சொல்லப்பட்டது. அதன்பின் அவரால் முடியவில்லை என்பதால் வேறு தயாரிப்பாளரை தேடி வருவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
