இன்னும் 100 படம் வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது... இந்தியன் 2 பார்த்த பின் பொங்கி எழுந்த சீமான்

by ராம் சுதன் |

இந்தியன் 2 படம் பார்த்ததும் ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இந்தியன் 2 படத்தைப் பார்த்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சொன்னது இதுதான்.

இந்தியன் 2 பார்த்தேன். எனக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. கமல் படங்களின் முதல் காட்சியைப் பார்ப்பேன். பொதுவாக நமது திரைக்கலை பொழுதுபோக்குக்காக அல்ல. நல்ல விதமாகவும் அதைப் பயன்படுத்தலாம். அன்றாடம் நிகழ்கிற அவலங்கள், பிரச்சனைகளை சொல்கிறது இந்தப் படம்.

நமக்கு எதுக்கு பிரச்சனை? நமக்கு எதுக்கு வம்புன்னு கடந்து போனா அது தான் நாட்டுக்குப் பிரச்சனை. இந்தப் படத்தின் ஒவ்வொரு உரையாடலும் தத்துவம் தான். ஆரம்பத்துல ஒரு பையன் சிறுநீர் கழிப்பதில் இருந்து ஒவ்வொரு காட்சியும் சிந்தனையை விதைக்கிறது. ஒவ்வொரு தோற்ற மாறுதலும் கமலுக்கு அருமையாக இருக்கிறது.

முதல் பாகத்துக்கும் இரண்டாவது பாகத்துக்கும் வேறுபாடு இருக்கு. பிரச்சனையைக் கேட்க யாராவது வர மாட்டார்களான்னு தான் பார்க்குறாங்க. வேத காலங்களில் இருந்தே இது தான் கற்பிக்கப்பட்டு வருகிறது. இறைதூதர் வரமாட்டாரா? நமது கஷ்டங்களுக்கு விடிவு பிறக்காதா என்று. இப்படியே இருந்து கொண்டே இருப்பதுதான் நமக்கான அழிவைத் தருகிறது.

கண்முன்னாடியே இயற்கை வளங்கள் எல்லாம் களவு போகிறது. சுத்தம் சுகம் தரும்னு சொல்றோம். அவரவர் இருக்குற இடத்தை சுத்தம் பண்ணினா போதும். நாடு நலம் பெறும். என்னால் முடியாததைக் கதாநாயகன் செய்தால் கைதட்டுகிறோம். நீ உன் வீட்டை சரி செய். ஏன் ஒருவன் வரணும்னு காத்துருக்க என்பதைத் தான் இந்தப் படம் சொல்கிறது.

அரசியல்வாதி ஊழல் செய்தால் அவரை மாற்றிவிடலாம். மக்களே ஊழல் மயமாகி விட்டால் ஒண்ணுமே பண்ண முடியாது. மண்ணில் புரட்சி வரும் முன் மக்களின் மனதில் புரட்சி வரணும். இந்தப்படம் ஆகச்சிறந்த விதையை ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் விதைத்துள்ளது. இதைப் பொழுதுபோக்காக பார்க்காமல் குற்றச்சமுதாயத்தை பழுதுபார்க்குற படமாகப் பார்க்க வேண்டும்.

இன்னும் 100 படம் எடுத்தாலும் ஊழலை மாற்ற முடியாது. அப்படின்னா ஒவ்வொருத்தரும் மாறணும். அப்ப தான் மாற முடியும். இன்னும் ஊழல் ஒழியவில்லை என்பதால் நோய் தீரும் வரை மருந்து கொடுத்துத் தான் ஆக வேண்டும். அதற்காகத் தான் இந்தப் படம். தாயின் கருவறையில் இருந்து கோயில் கருவறை வரை இங்கு காசு தான். அங்கு தான் பிறக்கிறது ஊழல் லஞ்சம். அதனால் தன்னலத்தில் இருந்து தான் இது பிறக்கிறது. ஒவ்வொருவரும் சரியானால் நாடு சரியாகி விடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story