வாலி எழுதி ரிஜெக்டான பாடல்... எம்ஜிஆருக்கோ அதுதான் சூப்பர் ஹிட்..! அப்படின்னா யார் மேல தப்பு?

by ராம் சுதன் |

கவிஞர் வாலி சினிமாவில் பாட்டு எழுத வந்தது சாதாரண விஷயமல்ல. அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். மிஸ் மாலினி, ஏழைபடும் பாடு, மகாத்மா உதங்கர் ஆகிய படங்களில் நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன். இவரை சுருக்கமாக கோபி என்றே அழைப்பர். ஏழை படும் பாடு படத்தில் பத்மினிக்கு ஜோடியாக நடித்தவர் இவர் தான்.

இவரிடம் வாலி கடிதம் எழுதியே நட்பு கொண்டு இருந்தார். ஒரு முறை இவர் திருச்சி வந்த போது வாலி அவரை சந்தித்தார். நான் சினிமாவில் பாட்டு எழுதலாம் என்று பார்க்கிறேன் என்றார். வாங்க வாலி. நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என அவர் ஊக்கப்படுத்தினார்.

1958ல் வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார். தி.நகரில் இருந்த கோபி அவருக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்தார். கோபி அவரை திரை உலகினரிடம் அறிமுகப்படுத்துவார். தினமும் பைக்கில் ஏற்றிக்கொண்டு அவரை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார்.

பலருக்கும் இவர் தனது நோட்டில் எழுதிய கவிதைகளைக் காட்டுவார். படித்துப் பார்த்துவிட்டு புன்சிரிப்பு சிரிப்பார்கள். அவ்வளவு தான். அப்போது பாதை தெரியுது பார் என்ற ஒரு படத்திற்கு எம்.பி.சீனிவாசன் என்ற இசை அமைப்பாளரிடம் வாலியை அறிமுகப்படுத்தி சான்ஸ் கேட்டார் கோபி. அப்போது பொதுவுடமை, சமூக விழிப்புணர்வுடன் ஒரு பாட்டு எழுதுங்க. பயன்படுத்தலாம் என சொல்கிறார். அப்போது அவர் எழுதிய பாடல் அவருக்குப் பிடிக்கவில்லை.

உடனே வேறு இடத்தில் முயற்சிக்கலாம். கவலைப்படாதீங்கன்னு அழைத்துச் செல்கிறார் கோபி. 1958ல் மலைக்கள்ளன் என்ற படத்திற்கு வாய்ப்பு கேட்க கோபி அவரை அழைத்துச் செல்கிறார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம் இருந்தார். அவரிடம் இசை அமைப்பாளர் இது ஒரு தாய் பாடும் தாலாட்டு என்று விளக்கினார்.

உடனே வாலி எழுதினார். 'நிலவும், தாரையும் நீயம்மா, உலகம் ஒருநாள் உனதம்மா...' பல்லவியைப் பார்த்து விட்டு அசந்து போனார். முக்கால் மணி நேரத்தில் பாடலை எழுதி முடித்தார். இசைஅமைப்பாளர் வாலியைத் தட்டிக் கொடுத்தார். நாளை ரெக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வாங்க என்றார்.

இப்படித்தான் வாலிக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் எழுதிய பாடல் முதலில் எம்.பி.சீனிவாசனால் நிராகரிக்கப்பட்டது அல்லவா. அது என்ன பாடல் தெரியுமா? கொடுத்ததெல்லாம் கொடுத்தான்... என்ற எம்ஜிஆரின் பாடல். இது படகோட்டி படத்தில் வரும் புகழ் பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story