எத்தனை வருஷம் இப்படியே நடிப்பீங்க!. எம்.ஜி.ஆரின் ரூட்டை மாற்றிவிட்ட இயக்குனர்!...
60களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குப் பெரும்பாலும் அரசர் காலத்துப் படங்களாகத் தான் வரும். குட்டைப்பாவாடையுடன் வாள் சண்டை போடும்போது அவரது திறமையான வாள்வீச்சு எதிரிகளைப் பந்தாடும். வளைந்து நெளிந்து லாவகமாக வாளைச் சுழற்றி சண்டை போடுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவருக்கு நிகராக வாள் வீசுபவர்கள் நம்பியார், மனோகர், பி.எஸ்.வீரப்பா இவர்களைச் சொல்லலாம். எம்ஜிஆர் முதன்முதலாகக் கதாநாயகனாக நடித்த படம் ராஜகுமாரி. இந்தப்படத்திலேயே அருமையாக வாள் சண்டை போட்டு இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது எம்ஜிஆர், ப.நீலகண்டன் இயக்கத்தில் சக்கரவர்த்தித் திருமகள் படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். இளவரசராக வந்த எம்ஜிஆரின் பெயர் உதயசூரியன். அந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகிகளுள் ஒருவர் சின்ன அண்ணாமலை. இவர் படப்பிடிப்பின்போது எம்ஜிஆருடன் பேசிப்பழகி நட்பை வளர்த்தார். அவருக்கு ஒரு ஆசை. எம்ஜிஆரை வைத்து சமூகப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்பது தான். அதை இயக்குனரின் காதில் போட்டுவிட்டார்.
ஒருநாள் படப்பிடிப்பின் இடைவேளையில், சமூகப்படங்கள் தொடங்கிவிட்ட காலத்தில் நீங்கள் இன்னும் வாள் வீசிக்கொண்டு இருக்கிறீர்களே என சின்ன அண்ணாமலை எம்ஜிஆரிடம் கேட்டாராம். அதற்கு 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்.. அல்லது வேறு யாரும்...? என்று சந்தேகத்தில் கேட்டாராம் எம்ஜிஆர்.
மறைந்த நண்பரான கல்கியும், நானும் உங்களை வைத்து பேசினோம். அப்போது எம்ஜிஆர் வாளைத் தூக்கி எறிந்து விட்டு சமூகத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என்று கூறினார். எனது ஆசையும் அதுதான்... என்றார் சின்ன அண்ணாமலை. அப்படியா, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்றாராம் எம்ஜிஆர். அதே நேரம் நல்ல சமூகப்படங்கள் கிடைக்க வேண்டும். அதற்கு முன்பு பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்க வேண்டும். அதற்கு அதன் உரிமையைப் பெற வேண்டும். அதற்கு அவரது குடும்பத்தாரிடம் பேசுங்கள் என்றார் எம்ஜிஆர்.
பார்த்தீர்களா இப்போது தான் சொன்னேன். நீங்கள் பொன்னியின் செல்வன் என்கிறீர்களே? என்றார். ஆனால் எம்ஜிஆர் சமூகப்படங்களில் வாள் சண்டையை எப்படி வைப்பது? சண்டையை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றலாமா என்று கேட்டாராம். அது மட்டுமல்லாமல், சமூகப்படங்களில் எனது பாகவதர் கிராப்போடு நடிப்பது நன்றாக இருக்காது என்றும் சொன்னாராம். சின்ன அண்ணாமலை இது நடக்கிற கதை அல்ல என்பதை புரிந்து கொண்டார்.
உடனே தான் கொண்டு சென்ற பையில் இருந்து ஒரு ஓவியத்தை எடுத்தாராம். அதில் எம்ஜிஆர் மாடர்ன் கிராப் வெட்டி, கோட், சூட்டுன் இருப்பது போல ஒரு அழகிய ஓவியம் இருக்க... இப்படி கிராப் வெட்டுங்கள். நீங்க ஒரு மாடர்ன் அழகனாக இருப்பீர்கள் என்றாராம். எம்ஜிஆரே வியந்து போய், அப்போ ஒரு முடிவோடு தான் வந்து இருக்கிறீர்கள் என்றாராம் சிரித்தபடி. அப்படி உருவானவை தான் நாடோடி மன்னன், திருடாதே படங்கள். இரண்டும் சக்கை போடு போட்டன.