மரியாதையாக அழைத்ததால் கோபித்துக்கொண்ட எம்.ஜி.ஆர் பட நடிகை… இதென்னய்யா புதுசா இருக்கு!!
1947 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், மாலதி, டி.எஸ்.பாலைய்யா, தவமணி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ராஜகுமாரி”. இத்திரைப்படம்தான் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். அதே போல் நடிகை மாலதி கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படமும் இதுதான்.
“ராஜகுமாரி” திரைப்படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கியிருந்தார். ஜூப்பிடர் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றியால் எம்.ஜி.ஆர் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக ஜொலித்து பின்னாளில் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராகவும், தமிழ் மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் முதல்வராகவும் திகழ்ந்தார்.
இந்த நிலையில் “ராஜகுமாரி” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற ஒரு நகைச்சுவையான சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
“ராஜகுமாரி” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தபோது இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, நடிகை மாலதியிடம் “அம்மா, உங்க முகத்தை இந்த பக்கம் நல்லா திருப்பி பாருங்கம்மா” என சொன்னாராம். இதை சொன்னவுடன் மாலதியின் முகம் அனல் கக்கியது போல் ஆகிவிட்டதாம்.
மேலும் பல காட்சிகளில் நடிக்கும்போது சிறப்பாக நடிக்கும் மாலதி, அக்காட்சிகளில் நடித்து முடித்தவுடன் தன்னுடைய முகத்தை கோபமாக வைத்துக்கொள்வாராம். இதனை பார்த்த ஏ.எஸ்.ஏ.சாமிக்கு ஒன்றுமே புரியவில்லையாம்.
மாலதி ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? ஒரு வேளை தான் இயக்குகின்ற பாணி அவருக்கு பிடிக்கவில்லையா? என்றெல்லாம் குழம்பிப்போய் நிற்பாராம் ஏ.எஸ்.ஏ.சாமி.
இதனை தொடர்ந்து ஒரு முறை மாலதியின் கணவரை அழைத்து “உங்கள் மனைவிக்கு என்னதான் பிரச்சனை? ஏன் கோபமாகவே முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். தயவுசெய்து அவரிடம் கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். எனக்கு அவரை வைத்து இயக்குவதற்கே கொஞ்சம் கடினமாக இருக்கிறது” என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரே வார்த்தை ஓஹோன்னு பாட்டு… அந்த ஒரு சொல்லால் கண்ணதாசனின் தலையில் உதித்த கிளாசிக் பாடல்… என்னவா இருக்கும்??
அதன் பின் மாலதியிடம் இந்த விஷயத்தை கேட்டுத் தெரிந்துகொண்ட கணவர், ஏ.எஸ்.ஏ.சாமியிடம் வந்து “நீங்க மாலதியை அம்மா அம்மான்னு கூப்புடுறீங்களாம். அது அவுங்களுக்கு பிரச்சனையாம். சாதாரணமா குழந்தை பெற்றுக்கொண்டவர்களைத்தான் அம்மா அம்மான்னு கூப்பிடுவாங்களாம். ‘நான் என்ன அவ்வளவு வயசானவளா?’ன்னு என்னைய பார்த்து கேட்குறாங்க. அதனால் நீங்க இனிமே மாலதியை அம்மா அம்மான்னு கூப்புடாதீங்க” என கூறினாராம். இதனை கேட்ட இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி “இவ்வளவுதான் விஷயமா?” என்று கொஞ்சம் பலமாகவே சிரித்தாராம்.