மும்பை டான் ஆக நடித்து மொக்கை வாங்கிய தமிழின் டாப் ஹீரோக்கள்… இதில் சிம்பு தப்பிப்பாரா?

by Arun Prasad |   ( Updated:2022-09-12 04:12:50  )
மும்பை டான் ஆக நடித்து மொக்கை வாங்கிய தமிழின் டாப் ஹீரோக்கள்… இதில் சிம்பு தப்பிப்பாரா?
X

தமிழ் திரைப்படங்களில் “மும்பை டான்” என்ற கதாப்பாத்திரம் “நாயகன்” திரைப்படத்திற்கு பிறகு வெற்றி ஃபார்முலாவாக பார்க்கப்பட்டது. மணி ரத்னம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாயகன்”. இத்திரைப்படம் மும்பையில் உண்மையாகவே வாழ்ந்த வரதராஜன் முதலியார் என்ற நபரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இத்திரைப்படம் கமல்ஹாசனின் திரைப்பயணத்திலேயே முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. மேலும் இன்றும் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“நாயகன்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மும்பை டான் ஆக நடித்த “பாட்ஷா” திரைப்படம் வெளிவந்தது. ரஜினிகாந்த்தின் கேரியரையே டாப் லெவலுக்கு கொண்டு சென்றது இத்திரைப்படம். குறிப்பாக “பாட்ஷா” திரைப்படத்திற்குப் பிறகு தான் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்கள் சூடுபிடிக்கத் தொடங்கின.

இது போன்ற இரண்டு மெகா ஹிட் மும்பை டான் திரைப்படங்களை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து 2013 ஆம் ஆண்டு விஜய் மும்பை டான் ஆக நடித்த “தலைவா” திரைப்படம் வெளிவந்தது. அத்திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு பின்பே திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த திரைப்படம் விஜய்க்கு கைக்கொடுக்கவில்லை.

அதன் பின் லிங்குசாமி இயக்கி சூர்யா நடித்த “அஞ்சான்” திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. இயக்குனர் லிங்குசாமி மொத்த வித்தையையும் அஞ்சானில் இறக்கியிருப்பதாக அப்போது ஒரு பேட்டியில் கூறினார். ஆனால் திரைப்படத்தில் இடம்பெற்ற தேவையில்லாத பில்ட் அப்கள் ரசிகர்களை உச் கொட்ட வைத்தது. குறிப்பாக “ராஜூ நஹீ, ராஜூ பாய் போலோ” என்ற வசனம் அத்திரைப்படம் வெளிவந்த பின் மீம் கிரியேட்டர்களால் கலாய்த்துத் தள்ளப்பட்டது.

இவ்வாறு தமிழின் டாப் மற்றும் மாஸ் ஹீரோக்களான சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் மும்பை டான் ஆக நடித்து மொக்கை வாங்கியதை தொடர்ந்து தற்போது சிம்பு இதில் களம் இறங்கியிருக்கிறார். ஆம்!

சிம்பு நடிப்பில் வருகிற 15 ஆம் தேதி வெளியாக உள்ளது “வெந்து தணிந்தது காடு” திரைப்படம். இதில் திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்தில் இருந்து மும்பைக்கு பிழைப்புக்காகச் செல்கிற ஒரு சாதாரண இளைஞனாக சிம்பு நடித்திருக்கிறார். ஆனால் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு டான் ஆக வருகிறாராம்.

அதாவது “வெந்து தணிந்தது காடு” முதல் பாகத்தில் சாதாரண இளைஞனாக வரும் சிம்பு எப்படி டான் ஆகிறார் என்பது தான் இரண்டாம் பாகமாம். இதற்கு முன் விஜய் மற்றும் சூர்யா டான் ஆக நடித்த திரைப்படங்கள் மொக்கை வாங்கிய நிலையில் சிம்பு மும்பை டான் ஆக தேறுவாரா என்று பார்க்கலாம்.

Next Story