மக்கள் திலகத்திற்கு கட்டளை போட்ட கலைவாணர்... விருப்பம் இல்லாமல் ஓகே சொன்ன எம்ஜிஆர்

நாடோடி மன்னன் படத்தின் இயக்குனராக எம்ஜிஆர் இருக்க வேண்டும் எனக் கூறியது கலைவாணர் தான் என்ற சுவாரஸ்ய தகவலை மோகன் காந்திராம் தெரிவித்து இருக்கிறார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் சக்கரவர்த்தித் திருமகள் படத்தில் ப.நீலகண்டனிடம் உதவி இயக்குநராக முதன் முதலாக சேர்க்கப்பட்டவர் மோகன் காந்திராம். கலைவாணரின் மிக நெருங்கிய நண்பர். சென்னை பொது மருத்துவமனையில் கலைவாணரின் உயிர் பிரிந்தபோது, அவருடன் இருந்த ஒரே நபர், மோகன் காந்திராமன் தான். அவர் தனக்கும் கலைவாணருக்குமான நட்பு குறித்தும், எம்ஜிஆருக்கு அவர் போட்ட கட்டளை குறித்தும் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
அதில், எப்போதுமே கார் பிரியாணத்தை மட்டுமே விரும்புவர் கலைவாணர். இதற்காக தனது கார் ஓட்டி தினகர் ராஜு என்பவருக்கு சென்னையின் பிரபல வாணி மஹாலில் ஒரு விழாவே கொண்டாடினார். அதுமட்டுமல்லாது, அந்த நிகழ்வுக்கு பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரையும் அழைத்திருந்தார். தனக்கு 25 வருடமாக கார் ஓட்டும் அவர், ஒரு விபத்தில் கூட தன்னை சிக்க வைத்தது இல்லை. ஏன்? அவரால் எனக்கு கீரல் கூட ஏற்பட்டது இல்லை என அந்த நிகழ்வில் கூறி நெகிழ்ந்தாராம்.
இதைப்போல ஒரு முறை, எம்ஜிஆருடன் ஒரு சந்திப்பில் கலைவாணர் கலந்து கொண்டார். காவேரி கரையோரம் நாற்காலி போடப்பட்டு அமர்ந்து இருந்த எம்ஜிஆர், ‘அண்ணா எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் நாடோடி மன்னன் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறேன். கதை ஏறக்குறைய தயாராக இருக்கிறது. சிலரிடம் இயக்க கேட்கப்பட்டது. ஆனால் சிலர் தவிர்த்தனர். சிலரை நாங்கள் தவிர்த்துவிட்டோம். தற்போது, நீங்கள் தான் இப்படத்தை இயக்கி கொடுக்க வேண்டும்’ என கலைவாணரிடம் கேட்டார்.
ஐந்து நிமிடங்கள் அமைதியாக இருந்தவர். எம்ஜிஆரை நோக்கி நான் சொன்னதை நீ என்றுமே தட்டியது இல்லை. என்னிடம் எதையும் சொல்ல வேண்டும் என நினைப்பது சிலதை தலையணைக்குள் எல்லாம் எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறாய். என் மீது அளவுக்கடந்த உன் மரியாதையை என் உயிருள்ள வரை காக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இப்படத்தால் நமக்குள் கருத்து வேறுபாடு வந்தால், நம் உறவுக்குள் பாதகம் வந்துவிடும்.
ஆனால், என்னை மன்னித்து விடு. நீ கேட்டதே எனக்கு பெரிய கவுரவம். உனக்கு இயக்குனர் என்பதை விட உனக்கு குருவாகவும், அண்ணாவாகவும் இருக்கவே ஆசைபடுகிறேன். சிறிது நேரம், சோர்ந்து இருந்த எம்ஜிஆர் சரி அப்போ இந்த படத்தை யாரை வைத்து இயக்கலாம் என்பதையாவது உங்கள் அனுபவத்தை வைத்து கூறுங்கள் எனக் கலைவாணரை நோக்கி கேட்டார். சொல்கிறேன். ஆனால் நீ செய்ய வேண்டுமே என எம்ஜிஆரை அர்த்தத்துடன் பார்த்தார்.
இப்படத்தின் இயக்குனர் எம்.ஜி.ராமச்சந்திரன் தான் என என்.எஸ்.கிருஷ்ணன் மனதார விரும்புகிறான். முடிந்தால் செய் எனக் கூறினார். அங்கிருந்த அனைவரும் அதையே அமோதிக்க, எம்ஜிஆரும் தான் சென்னை சென்று முடிவெடுத்துவிட்டு சொல்வதாக சென்றுவிட்டார். தொடர்ந்து, அவர் சொன்ன மாதிரி அதை செய்தும் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.