Connect with us

Cinema History

இரட்டை வேடத்தில் நடித்த முதல் தமிழ் நடிகர்… பாகவதருக்கே டஃப் கொடுத்த ஹீரோவின் சுவாரஸ்ய வரலாறு..

எம் ஜி ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், ஆஜித்-விஜய் என தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் இந்த போட்டி என்பது எம் ஜி ஆர்-சிவாஜி காலத்தில் இருந்து தான் தொடங்கியது என நாம் நினைத்திருப்போம்.

ஆனால் அதற்கு முன்பே இரு நடிகர்களுக்குள் இது போன்ற போட்டி நிலவியது. அவர்கள் தான் பாகவதர்-பி யு சின்னப்பா ஆகியோர். தியாகராஜ பாகவதர் என்றவுடன் நமக்கு நினைவில் வருவது என்னவோ “ஹரிதாஸ்” திரைப்படம் தான். “ஹரிதாஸ்” திரைப்படம் 3 தீபாவளியையும் தாண்டி ஓடிய வெற்றித் திரைப்படம் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அவ்வாறு அந்த காலத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய தியாகராஜ பாகவதருடனேயே போட்டி போட்டவர் தான் பி யு சின்னப்பா. பி யு சின்னப்பா “தவ நடிக பூபதி” என்ற பட்டத்தை பெற்றவர். புதுக்கோட்டையை சேர்ந்த சின்னப்பாவின் இயற்பெயர் சின்ன சாமி. இவரது தந்தை ஒரு நாடக நடிகர். இதன் காரணத்தால் சின்னப்பாவும் சிறு வயதில் இருந்தே பல நாடகங்களில் நடித்து வந்தார்.

நன்றாக நடிக்கவும் பாடவும் கற்றுக்கொண்ட இவர் நன்றாக கத்தி சண்டையும் பழகி இருந்தார். அக்காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் நடிக்க மட்டுமல்ல பாடவும் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு பல திறமைகளை கொண்ட சின்னப்பா பல புகழ்பெற்ற மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் 1936 ஆம் ஆண்டு “சந்திரகாந்தா” என்ற திரைப்படத்தை ஜீபிடர் நிறுவனம் தயாரித்தது. அதாவது “சந்திரகாந்தா” ஏற்கனவே மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்ட ஒன்று. அதனை தழுவி தான் இத்திரைப்படமும் உருவாக்கப்பட்டது.

“சந்திரகாந்தா” நாடகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சின்னப்பா. ஆதலால் நாடகத்தில் நடித்த அதே வேடத்தில் திரைப்படத்திலும் நடித்தார் சின்னப்பா. இது தான் பி யு சின்னப்பாவின் முதல் திரைப்படமாகும். தனது முதல் திரைப்படத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதனை தொடர்ந்து “பஞ்சாப் கேசரி”, “அனாதை பெண்”, “யயாதி”, “மாத்ருபூமி” என பல திரைப்படங்களில் நடித்தார் சின்னப்பா. ஆனால் இத்திரைப்படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்த சின்னப்பா, சாமியாராக முடிவு செய்தார். சாமியாராகும் முயற்சியில் உண்ணாவிரதம் கூட மேற்கொண்டார் என சிலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஒரு தரமான சம்பவம் அவரது வாழ்வில் நடந்தது. அதாவது ஆங்கிலத்தில் வெளிவந்த “மேன் இன் தி அயர்ன் மாஸ்க்” என்ற திரைப்படத்தை தமிழில் உருவாக்க முயன்றனர் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தார். இதில் கதாநாயகனாக சின்னப்பா ஒப்பந்தமானார். அதுவும் இரட்டை வேடம். இதன் மூலம் தமிழில் இரட்டை வேடத்தில் நடித்த முதல் நடிகர் சின்னப்பா என்ற வரலாற்றுச் சம்பவத்தை இத்திரைப்படம் அவருக்கு கொடுத்தது.

அப்போது இரண்டு சின்னப்பாவை ஒரே நேரத்தில் திரையில் கண்ட ரசிகர்கள் “ஆ” என வாயை பிளந்தனர். மிகவும் ஆரவாரமாக சின்னப்பாவை கொண்டாடினர். அவரின் புகழ் எங்கோ சென்றது. இதனை தொடர்ந்து சின்னப்பா “ஆர்யமாலா’, “கண்ணகி” என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து பாகவதருக்கு போட்டியாக திகழ்ந்தார் பி யு சின்னப்பா.

அக்காலத்தில் பாகவதர் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். அவருக்கு இணையான இன்னொரு சூப்பர் ஸ்டாராக சின்னப்பா வளர்ந்தார் என்று கூறினாலும் அது மிகையாகாது.

google news
Continue Reading

More in Cinema History

To Top