சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியிருக்கிறது. 1964-ல் கதை நடப்பது போல காட்டுகிறார்கள். 1960 காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதைதான் என ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தாலும் விஸ்வலாக பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் தம்பியாக வரும் அதர்வா ஹிந்திக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். வடமாநிலத்திலிருந்து ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்வதற்காக ஸ்ரீலீலா தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவரை காதலிப்பதற்காக அவரிடம் ஹிந்தி கற்றுக் கொள்ள செல்கிறார் சிவகார்த்திகேயன். ஒருபக்கம் சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வாவின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை சிவகார்த்திகேயன் எதிர்க்கிறார். அவரை கட்டுப்படுத்தவும் முயற்சி செய்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனெ அதர்வா இடத்திலிருந்து ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை துவங்குவது போல காட்டுகிறார்கள். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக டெல்லியிலிருந்து வரும் மத்திய அரசு அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார். சும்மா சொல்லக்கூடாது.. வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தலாகவே நடத்திருக்கிறார் ஜெயம் ரவி. சாதாரண போராட்டத்தை ஜெயம் ரவி கலவரமாக மாற்ற என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
டெல்லி மட்டும்தான் இந்தியாவா?.. நாங்கள் ஹிந்தியை எதிர்க்கவில்லை.. ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்’. போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது. ரயில்வே துறையில் வேலை செய்யும் மத்திய அரசு பணியாளராக சிவகார்த்திகேயனும் நன்றாகவே நடித்திருக்கிறார். அதேநேரம் அவரை விட அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள். அதேநேரம், பெரும்பாலான காட்சிகளை ஸ்டுடியோவிலேயே செட் போட்டு எடுத்திருப்பது மைனஸாக தெரிகிறது.
டிரெய்லர் வீடியோவை பார்க்கும்போது ஒரு கமர்சியல் வெற்றி படத்திற்கு தேவையான மசாலா காட்சிகள் படத்தில் இருப்பது போல தெரியவில்லை. எனவே இது விஜயின் ஜனநாயகனோடு போட்டி போடுவதற்கு தகுந்த படமா என்பதை ரசிகர்களே தீர்மானிப்பார்கள்.
