விஜயின் ஜனநாயகன் படத்தோடு சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மோதுகிறது என செய்தி வெளியானதில் இருந்தே பலரும் அவர்களுக்கு தோன்றுவது போல விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன் திட்டமிட்டு விஜய் படத்துடன் மோதுகிறார்.. அடுத்த விஜயாக மாற ஆசைப்படுகிறார்.. இதற்கு பின்னணியில் அரசியல் காரணம் இருக்கிறது என்றெல்லாம் பலரும் சொன்னார்கள்.
அதற்கு முக்கியமான காரணம் ஜனநாயகன் 9ம் தேதியும், பராசக்தி படம் 14ம் தேதியும் வெளியாகவிருந்தது. ஆனால் திடீரென 10ம் தேதியே பராசக்தி ரிலீஸ் என அறிவித்தார்கள். இதுதான் விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. அப்போதிலிருந்தே அவர்கள் சிவகார்த்திகேயனை மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில்தான், பராசக்தி படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 1964-ல் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. மத்திய அரசின் ரயில்வே துறையில் வேலை செய்பவராக சிவகார்த்திகேயன், அவரின் தம்பியாக அதர்வா, ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக ஸ்ரீலீலா மற்றும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் வில்லனாக ஜெயம் ரவி என காட்டுகிறார்கள்.

அதர்வா ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட அவரை சிவகார்த்திகேயன் தடுக்கிறார். ஆனால், அதர்வாவை ஜெயம் ரவி கொன்றுவிட சிவகார்த்திகேயனே போராட்டத்தை கையில் எடுக்கிறார். சாதாரண போராட்டத்தை கலவரமாக மாற்றி பலரையும் கொல்கிறார் ஜெயம் ரவி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
டிரெய்லர் நன்றாகவே இருக்கிறது. அதேநேரம் ஜனநாயகன் படத்தோடு போட்டி போடும் அளவுக்கு பராசக்தி படம் ஒர்த்தா என்கிற கேள்வியும் வருகிறது. ஏனெனில் பராசக்தி டிரெய்லரை பார்க்கும்போது ஜனநாயகன் படத்தோடு மோதுமளவுக்கு கமர்சியலான, மாஸான காட்சிகள் இல்லை என்று தோன்றுகிறது. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் ஜனநாயகனோடு மோத முடிவெடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை முழு படமாக பார்க்கும் போது பராசக்தி ஒரு சிறந்த படமாக கூட இருக்கலாம். அது படம் வந்த பின்னரே தெரியவரும்.
நேற்று வெளியான ஜனநாயகன் டிரெய்லரில் அசத்தலான ஆக்சன், செண்டிமெண்ட் மற்றும் மாஸான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. டிரெய்லரை பார்க்கும் போதே கண்டிப்பாக இந்த படம் அசத்தலான வெற்றியை பெரும் என தெரிந்துவிட்டது. ஆனால் பராசக்தி டிரெய்லரை பார்த்தால் அப்படி தெரியவில்லை. பராசக்தி நல்ல கதையம்சம் கொண்ட ஒரு சிறந்த படமாக இருக்கலாம்.. அதேநேரம் ஜனநாயகனோடு போட்டி போடுமளவுக்கு ஒரு கமர்சியல் ஹிட் படமாக இருக்குமா என்பது ஜனவரி 10ம் தேதி தெரிந்துவிடும்..
