கடுப்பாகி காசு கொடுக்க மறுத்த தயாரிப்பாளர்.. நாயகன் படத்த எப்படி எடுத்தாங்க தெரியுமா?!..
திரைப்படம் என்பது கலைவண்ணம் என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு அது வியாபாரம்தான். இவ்வளவு பணம் போட்டால், இவ்வளவு லாபம் வரும் என கணக்கு போட்டுத்தான் செலவு செய்வார்கள். அல்லது இவ்வளவு லாபம் வரும் எனில் இவ்வளவு செலவு செய்யலாம் என கணக்கு போடுவார்கள். அதில் தவறும் ஏதுமில்லை. அதுதான் அவர்களின் தொழில். ரசிகர்கள் சினிமாவை பார்க்கும் பார்வை வேறு. தயாரிப்பாளர்கள் பார்க்கும் பார்வை வேறு. அது முழுக்க முழுக்க பணம் மற்றும் வியாபாரம் தொடர்புடையது.
திரையில் நாம் பார்த்து ரசித்த பல படங்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கி திணறியிருக்கிறது. மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்து இப்போது வரை பேசப்படும் திரைப்படமான ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் எடுக்கப்படும் போது, ஒரு கட்டத்தில் நான் இதற்கு மேல் பணம் தரமாட்டேன் என அப்படத்தின் தயாரிப்பாளர் கைவிரித்துவிட்டார். இந்த தகவல் கமலுக்கு தெரிந்து அவர் பணம் கொடுத்துதான் ஒரு பாடல் காட்சியை எடுத்தார் மகேந்திரன்.
அதேபோல், கமல் நடித்த நாயகன் படம் கூட இதில் தப்பவில்லை. இப்படத்தை முதலில் தயாரித்தது முக்தா சீனிவாசன். படப்பிடிப்பில் காட்சிகளை மணிரத்னம் எடுக்கும் காட்சிகளை பார்த்து கடுப்பான அவர் ‘எதற்காக எடுத்ததையே மீண்டும் மீண்டும் எடுக்கிறார்கள். இன்னைக்கு போதும். நாளைக்கு எடுங்கள்’ என கோபமாக கூறிவிட்டு சென்றுவிட்டாராம். இப்போது போல் அப்போது டிஜிட்டல் பிலிம் இல்லை. கேமரா ஓட ஓட செலவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
கமல் நடிப்பதற்கான ஒத்திகையெல்லாம் செய்துவிட்டு தயாராகி படப்பிடிப்புக்கு வந்தால் படப்பிடிப்பு நடக்கவில்லை. இதுபற்றி அவர் மணிரத்னத்திடம் கேட்க அவர் பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து கொடுத்தாராம். அதில் ‘இன்னைக்கு கோட்டா அவ்வளவுதான்’ என எழுதியிருந்ததாம்.
ஒருகட்டத்தில் மணிரத்தினத்தின் அண்ணன் ஜி.வி.பிரகாஷே இப்படத்தை தயாரிக்க முன்வந்தார். முக்தா சீனிவாசனிடமிருந்து அவருக்கு படம் கை மாறியது. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படம்தான் ‘நாயகன்’. இப்போது வரை தமிழில் சிறந்த கிளாசிக் படமாக இப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சினிமாவுக்கு அடுத்து அதுதான்!.. அஜித்தின் பல வருட ஆசை நிறைவேறுமா?!..