விஜயகாந்திற்கும் வடிவேலுவுக்கும் உள்ள ஒற்றுமை!.. என்னதான் அடிச்சுக்கிட்டாலும் அதுல ஒன்னாதான் நிக்கிறாங்க..
தமிழ் சினிமாவில் விஜயகாந்திற்கு ஏற்ற ஜோடியாக இருந்தவர் நடிகர் வடிவேலு மட்டுமே. இருவரின் காம்போவில் ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும் திரையில் இவர்கள் செய்யும் லூட்டியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு காலத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தான் இருந்து வந்தனர்.
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் போது கூட வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகளின் போதும் மேடையில் இவர்கள் இணைந்து நகைச்சுவை நாடகம் நிகழ்த்தியுள்ளனர். அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த இவர்களை ஒரு நேரத்தில் அரசியல் தான் பிரித்தது.
அப்பொழுது கூட விஜயகாந்த் வடிவேலுவை எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் வடிவேலு தான் வாய்க்கு வந்தபடி விஜயகாந்தை சரமாரியாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரு ஒற்றுமையை காமெடி நடிகர் கிங்காங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதாவது மன்சூர் அலிகானின் மகள் திருமண வரவேற்பின் போது விஜயகாந்தும் வந்திருக்கிறார். அப்போது கிங்காங்கும் சென்றிருக்கிறார். விஜயகாந்தை பார்த்ததும் கிங்காங் அருகில் போய் பேசியிருக்கிறார். அப்போது கேப்டன் கிங்காங்கிடம் ‘ நான் எப்போதுமே இரவு 11 மணிக்கு மேல் வடிவேலுவின் காமெடியை தார் பார்ப்பேன், எல்லா வேலைகளையும் முடித்து விட்டு மனதை குதூகலமாக வைத்துக்கொள்ள வடிவேலுவின் காமெடியை பார்த்து விட்டு தான் தூங்குவேன்’ என்று கூறியிருக்கிறார்.
கிங்காங் இயல்பாகவே மிமிக்ரி செய்யும் கலைஞரும் கூட. சிவாஜி , எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றோரின் குரலை தெள்ளத்தெளிவாக பேசுவாராம். இதை தெரிந்து கொண்ட வடிவேலு கிங்காங்கிடம் அடிக்கடி விஜயகாந்தின் குரலை பேசச் சொல்லி ரசிப்பாராம். எப்பொழுது பார்த்தாலும் விஜயகாந்தின் குரலைத்தான் பேச சொல்லுவாராம் வடிவேலு.
வெளியில் என்னதான் சண்டை இருந்தாலும் இருவருக்கும் உள்ளுக்குள்ளே அந்த ஆரம்பகால பாசப்பிணைப்பு இருக்கத்தான் செய்கிறது. இதை கூறிய கிங்காங் கூட இருவருமே உண்மையிலேயே மிகவும் நல்லவர்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க : இளையராஜா சொன்ன அட்வைஸ்… பாடகர் மனோ வாழ்க்கையில் நிகழ்ந்த மேஜிக்… அடடா!