சென்சாரில் துண்டு துண்டான நடிகர் திலகத்தின் பாடல்... அடேங்கப்பா அவ்வளவு விரசமாகவா இருந்தது..!
உத்தமபுத்திரன் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வரும் பாடல் 'யாரடி நீ மோகினி' தான். இது மேற்கத்திய இசை வடிவமான ராப் பாடலைப் போல் அமைந்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் அனைவரும் விரும்பினார்களாம். உடனே இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் சற்றும் தயங்காமல் அனாயசமாக டியூன் போட்டார். டி.எம்.சௌந்தரராஜன், ஜிக்கி, ஜமுனா ராணி மூவரும் பாடி அசத்தினர்.
இதையும் படிங்க... சிவாஜி எந்த இயக்குனரின் காலில் விழுந்து வணங்கினார் தெரியுமா? பராசக்தி நாடகத்துல நடிச்ச ஹீரோயின் இவரா..?!
பாடல் முழுக்க இசை வெரைட்டியாக இருந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. கேட்பவர்கள் தாளம் போட ஆரம்பித்தனர். நடிகர் திலகம் சிவாஜியும் பாடலில் நேர்த்தியான அசைவுகளை நவீனமாகச் செய்து அசத்தியிருந்தார். தன் இடது கை பழக்கத்தை உபயோகப்படுத்தி கைதட்டும் ஸ்டைல் செம மாஸாக இருக்கும். இது போன்று வேறு ஒரு பாடலுக்கு சிவாஜி ரசனையுடன் நடித்து இருப்பாரா என்பது சந்தேகம் தான். இந்தக் கதாபாத்திரம் ஆடல், பாடல், போதை, மங்கை, களி ஆட்டங்களுக்கு அடிமை ஆக்கப்பட்டவனின் வாழ்க்கை.
பாடலின் இடையே வரும் நம்பியாரும் இந்தக் களியாட்டத்தில் விருப்பமில்லாமல் இருப்பார். அவருடன் வரும் ஓ.ஏ.கே.தேவர் அதை ரசிக்க நம்பியார் முறைக்க உடனே நிறுத்தி விடுவாராம். ஆனால் போகப் போக அந்தப் பாடலை நம்பியாரும் ரசித்துக் கைதட்டி விடுவார். அந்தளவு விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத பாடல் அது.
சிவாஜியின் ஆட்டம் என்றால் அது அனாயாசமானது. வேறுபட்ட ஸ்டைல்களைக் காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பார். என்ன ஸ்பீடு, என்ன நடை, என்ன வேகம் என நம்மையும் ஆச்சரியப்படுத்தி இருப்பார் நடிகர் திலகம்.
சிவாஜி இந்தப் பாடலில் நடிக்கும்போது அதிகமான காய்ச்சலுடன் இருந்தாராம். பாடலைப் பார்த்தால் நம்பவா முடிகிறது? ஆனால் பாடல் முழுவதையும் நாம் பார்க்கவில்லை. பாதி வரிகளும், சரணங்களும் சென்சாரில் கட் பண்ணிவிட்டார்கள். பாடலில் உள்ள 'திராட்சையின் தேன் சாறடி, மோசமே நீ தானடி. மீறுகின்ற போதை ஏறுகின்ற போதே மேலும் மேலும் நீ ஊற்றடி' என்ற வரிகள் முதலில் போடப்பட்டு இருந்ததாம். அதன்பிறகு சென்சாருக்கு அவை இரையானதாம். வரிகளில் விரசம் உள்ளதாம். இதே போல இன்னும் பல வரிகள் இரையாகி உள்ளதாம். படத்தில் காட்டப்பட்டதை விட 1 நிமிடம் அதிகமாக ஓடும் பாடல் இது.