விஜயின் ஜனநாயகன் படத்தோடு சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாவதை வைத்து பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன் அடுத்த விஜயாக ஆசைப்படுகிறார். அதனால்தான் விஜயோடு போட்டி போடுகிறார். இதற்கு பின்னல் அரசியல் காரணங்கள் இருக்கிறது என்றெல்லாம் பலரும் பேசி வருகிறார்கள். ஒருபக்கம் விஜய் ரசிகர்களும் சிவகார்த்திகேயனை கடுமையாக திட்டி வருகிறார்கள்.
இந்நிலையில்தான் நேற்று நடந்த பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
படம் ஆரம்பிக்கும் போதே ஆகாஷ் புரோ (பராசக்தி தயாரிப்பாளர்) அக்டோபர் அல்லது டிசம்பர் ரிலீஸ் என்றுதான் பேசினார். ஆனால் அக்டோபரில் விஜய் சாரோட படம் வருகிறது என சொன்னதும் பராசக்தி பொங்கல் ரிலீஸ் என சொன்னார். ஆனால் விஜய் சார் படமும் பொங்கலுக்கு வருகிற என அறிவிப்பு வந்ததும் நான் உடனே ஆகாஷை தொடர்பு கொண்டு ‘பொங்கலுக்கு விஜய் சார் படம் வருகிறது.. தேதியை மாற்றலாமா?’ எனக் கேட்டேன்.

ஆனால் அவரோ ‘இதற்கு மேல் ரிலீஸை மாற்ற முடியாது.. ஏப்ரலில் தேர்தல் வரும்.. தயாரிப்பு, விநியோகம் என நிறைய பேர் இதில் முதலீடு செய்திருக்கிறார்கள்.. எல்லோரிடமும் பொங்கல் ரிலீஸ் என சொல்லிவிட்டோம். இப்போது மாற்ற முடியாது’ என்றார். ஒரு தயாரிப்பாளராக அவர் சொல்வதும் சரிதான். நான் உடனே விஜய் சார் மேனேஜர் ஜெகதீஷ் ப்ரோவிடம் பேசினேன் ‘இதுல என்ன பிரச்சனை?’ எனக் கேட்டார்.
‘புரோ இது விஜய் சாரோட கடைசிப் படம்.. இதுதான் பிரச்சனை என அவரிம் சொல்லிவிடுங்கள்’ என சொன்னென். 10 நிமிஷத்துல அவர் என்னை அழைத்தார். ‘சாரிடம் பேசிவிட்டேன். இதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. எஸ்.கே.வுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லுங்கள் என சொன்னார்’ என என்னிடம் கூறினார். எங்களுக்குள் நடந்தது இதுதான்..
ஆனால் இடையில் சிலர் காமெடி பண்ணிட்டு இருக்காங்க.. சிலருக்கு வியாபாரம்.. சிலருக்கு வன்மம்.. யார் என்ன வேணா சொல்லட்டும்.. இது அண்ணன் தம்பி பொங்கல்’ என தெறிக்கவிட்டார் சிவகார்த்திகேயன். மேலும், 9ம் தேதி விஜய் சாரோட ஜனநாயகன் பாருங்க.. 10ம் தேதி நம்ம படத்துக்கு வாங்க.. என்று பேசினார்.
மொத்தத்தில், ஜனநாயகன் படத்தோடு பராசக்தி படம் வருவது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
