ஷூட்டிங்கில் விபத்தில் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா!.. மருத்துவனையில் அனுமதி!….

Published on: January 6, 2026
killer
---Advertisement---

அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அந்தப் படத்திற்கு பின் விஜய், ஜோதிகாவை வைத்து அவர் இயக்கிய குஷி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் மற்ற ஹீரோக்களை வைத்து படம் எடுக்காமல் தானே ஹீரோவாக நடிப்பது என முடிவு எடுத்தார் எஸ்.ஜே.சூர்யா. அங்குதான் ஒரு இயக்குனராக அவர் சறுக்க தொடங்கினார்.

நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை இயக்கி அதில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படங்கள் அவரே சொந்தமாக தயாரித்ததால் அவருக்கு நஷ்டமும் ஏற்பட்டது. அந்த கடனை அடைப்பதற்காக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவரால் ஹீரோவாக சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மெர்சல் போன்ற படங்களில் வில்லனாக நடித்த பின் அவருக்கு வில்லன் பட வாய்ப்புகள் வந்தது.

தொடர்ந்து பல படங்களிலும் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார்.
சிம்புவுடன் மாநாடு, விஷாலுடன் மார்க் ஆண்டனி என கலக்கி ரசிகர்களிடம் பிரபலமானார். இந்நிலையில்தான் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள எஸ்.ஜே சூர்யா கில்லர் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக ஒரு சண்டைக் காட்சியை படக்குழு படமாக்கிய போது இரும்பு கம்பியில் மோதி எஸ்.ஜே சூர்யாவின் காலில் காயம் ஏற்பட்டது. எனவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இரண்டு வாரங்கள் அவரை ஓய்வெடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.