எம்.ஜி.ஆர் படத்தில் டி.எம்.எஸ் பாட துவங்கியது இப்படித்தான்... செம பிளாஷ்பேக்..

50,60களில் தமிழ் சினிமாவில் கலக்கிய பாடகர்தான் டி.எம்.சவுந்தரராஜன். தனது கணீர் குரலால் ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர். 80களில் எப்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருந்தாரோ அப்படி 60களில் இருந்தவர் இவர்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி என பலருக்கும் தனது குரலில் பல இனிமையான பாடல்களை பாடியவர்.
குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் பல காதல், சோக, தத்துவ பாடல்களையும், எழுச்சிமிக்க பாடல்களையும் டி.எம்.எஸ் பாடி இருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு ஏற்றார் போல் குரலை உயர்த்தியும், சிவாஜிக்கு ஏற்றார் போல் குரலை இறக்கியும் கச்சிதமாக பாடும் பாடகர் இவர். எம்.ஜி,ஆர், சிவாஜி இருவருக்கும் பல வருடங்கள், பல திரைப்படங்கள், பல பாடல்களை பாடினார் டி.எம்.எஸ்.

tms
எம்.ஜி.ஆரை மக்களிடம் கொண்டு சேர்த்ததே அவரின் படங்களில் இடம் பெற்ற பாடல்கள்தான். அந்த பாடல்களை எல்லாம் பாடியது டி.எம்.எஸ்.தான். ஆனால், ஒரு கட்டத்தில் டி.எம்.எஸ். பீக்கில் இருக்கும்போதே எஸ்.பி.பாலசுப்பிரமணியம், யேசுதாஸ் போன்ற புதிய பாடகர்களை தனது படங்களில் பாட வைத்தார் எம்.ஜி.ஆர். இதனால் டி.எம்.எஸ் கோபப்பட்டதும் நடந்தது.
எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ராஜகுமாரி. அந்த படத்தில் அவருக்கு பாடல்களை பாடியது எம்.எம்.மாரியப்பன் என்கிற பாடகர்தான். ராஜகுமாரி படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து எம்.ஜி.ஆரின் படங்களில் அவர்தான் பாடி வந்தார். 1954ம் வருடம் எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த கூண்டுக்கிளி படம் உருவானபோது அந்த படத்திற்கு பாட வந்தவர்தான் டி.எம்.எஸ்.
அவரின் குரல் எம்.ஜி.ஆருக்கு பிடித்துப்போகவே அவரைப்பற்றிய விபரங்களை வாங்கினார். அதன்பின் மலைக்கள்ளன் படம் உருவானபோது இந்த படத்தில் தனக்கு எல்லா பாடல்களையும் டி.எம்.எஸ்-தான் பாட வேண்டும் என எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார். மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பாடியது. அதன்பின் தனக்கு டி.எம்.எஸ் மட்டுமே பாட வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ் பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் பாடல் இப்போதும் அதிமுக கட்சி பிரச்சார கூட்டங்களில் ஒலித்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.