Connect with us

Cinema History

கறுப்பு பெண்… ஆனால் கவர்ச்சி பெண்… தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னியின் சுவாரசிய கதை…

தமிழ் சினிமாவில் சிம்ரன், த்ரிஷா, நயன்தாரா என பல கனவுக்கன்னிகள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக சுதந்திர இந்தியாவிற்கு முன்பே திகழ்ந்தவர்தான் டி. ஆர். ராஜகுமாரி.

தமிழ்நாட்டின் முதல் கனவுக்கன்னி என அழைக்கப்படுபவர் டி. ஆர். ராஜகுமாரி. தமிழ் சினிமாவில் 5 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த பெருமையைக்கொண்டவரும் இவரே. நடிகை மட்டுமல்லாது படத்தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர் என பல பரிமாணங்களில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட டி. ஆர். ராஜகுமாரி, பின்னாளில் தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னியாக திகழ்ந்தாலும் தொடக்கத்தில் தனது நிறம் காரணமாக ஒதுக்கப்பட்டார்.

தஞ்சாவூரில் 1922 ஆம் ஆண்டு பிறந்த ராஜகுமாரியின் இயற்பெயர் ராஜாயி. ராஜகுமாரியின் அத்தையான எஸ். பி. எல். தனலட்சுமி 1940களில் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது தனது அத்தை தனலட்சுமியுடன் சென்னைக்கு புறப்பட்டவர்தான் ராஜகுமாரி.

ஒரு நாள் தனலட்சுமியை தனது திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்ய வந்தார் பிரபல இயக்குனரான கே. சுப்பிரமணியம். அப்போது யதேச்சையாக தனலட்சுமியின் வீட்டில் ராஜகுமாரியை பார்த்தார் அவர்.

பார்த்தவுடனே இது சினிமாவுக்கான முகம் என கணித்துவிட்ட சுப்பிரமணியம், ராஜகுமாரியை அடுத்த நாளே ஸ்டூடியோவிற்கு வரச்சொல்லிவிட்டார். அப்போது மிகவும் பிரபலமான ஒப்பனை கலைஞராக திகழ்ந்த ஹரிபாபுவை அழைத்து மேக்கப் டெஸ்ட்டுக்காக ராஜகுமாரிக்கு சினிமா நடிகையைப் போல் ஒப்பனை செய்யச்சொன்னார் சுப்பிரமணியம்.

ஆனால் ராஜகுமாரியின் கறுப்பு நிறத்தை பார்த்த ஹரிபாபு, “இவளுக்கா மேக்கப் டெஸ்ட் போடுவது?” என மறுத்துவிட்டாராம். மேலும் சுப்ரமணியத்திடம் “நிஜமாகவே இந்த பெண்ணுக்குத்தான் போடச்சொல்கிறீர்களா?” என கேட்டிருக்கிறார்.

அதற்கு சுப்ரமணியம் “ராஜகுமாரி கறுப்பு நிறமாக இருந்தாலும், கேமராவுக்கு பொருத்தமாக இருப்பாள். சீக்கிரம் மேக்கப் போடுங்கள்” என கூறியிருக்கிறார். அதன் பின் ராஜகுமாரிக்கு அரைமனதுடன் மேக்கப் போட்ட ஹரிபாபுவுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

ராஜகுமாரியை பல கோணங்களில் புகைப்படம் எடுத்து பிரிண்ட் போட்டு பார்த்தார் சுப்பிரமணியம். அப்புகைப்படங்களை பார்த்தபோது அசந்துப்போன அவர், “எனது திரைப்படத்தில் நீ நடிக்கிறாய்” என ராஜகுமாரியிடம் கூறியிருக்கிறார்.

அவர் அப்படி சொன்னதும் கதாநாயகிக்கு தோழி வேடத்தில்தான் தன்னை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் என முதலில் நினைத்தாராம் ராஜகுமாரி. ஆனால் அதன் பின்புதான் தெரிந்திருக்கிறது கதாநாயகி வேடம் என்று.

கே. சுப்பிரமணியம் இயக்கிய “கச்சதேவயானி” என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் டி. ஆர். ராஜகுமாரி. ராஜாயி என்ற பெயரை ராஜகுமாரி என்று மாற்றியவர் சுப்பிரமணியம்தான்.

1941 ஆம் ஆண்டு வெளியான “கச்சதேவயானி” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இத்திரைப்படத்தில் நடித்த ராஜகுமாரியைப் பார்த்த பார்வையாளர்கள் “அழகுன்னா இப்படில இருக்கனும்” என மெச்சிப்புகழ்ந்தார்களாம். இத்திரைப்படம் 25 வாரங்கள் ஓடியது. அதன் பின் ராஜகுமாரி, உண்மையிலேயே ஒரு ராஜகுமாரி போல்தான் திகழ்ந்தார்.

“கச்சதேவயானி” திரைப்படத்திற்கு பின் “சூர்யபுத்ரி”, “மனோன்மணி”, “குபேரா குசேலா”, “சிவகவி”, “ஹரிதாஸ்” என பல திரைப்படங்களில் நடித்தார். எனினும் இத்திரைப்படங்கள் கொடுத்த புகழுக்கும் மேல் புகழ் சேர்க்கும் வகையில் ராஜகுமாரிக்கு ஒரு திரைப்படம் அமைந்தது.

அத்திரைப்படம்தான் “சந்திரலேகா”. 1948 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டது. அப்போதே ரூ. 30 லட்சம் செலவில் உருவான திரைப்படம் இது. இத்திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு தாறுமாறாக ஓடியது. இத்திரைப்படத்திற்கு பின் புகழின் உச்சிக்குச் சென்றார் ராஜகுமாரி.

“சந்திரலேகா” திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ராஜகுமாரி, சென்னையில் சொந்தமாக ஒரு திரையரங்கை கட்டினார். அதன் பின் தனது சகோதரரும் பிரபல இயக்குனருமான ராமண்ணாவுடன் இணைந்து “ஆர் ஆர் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே சொந்தமாக திரையரங்கு வைத்திருந்த முதல் நடிகை ராஜகுமாரிதான்.

தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் என தமிழின் அப்போதைய சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக நடித்த பெருமைக்கு உரியவர் ராஜகுமாரி. மேலும் எம். ஜி. ஆர்-சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படமான “கூண்டுக்கிளி” திரைப்படத்தை தயாரித்தவரும் ராஜகுமாரியே.

இவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்களை பல காலமாக தன் கைக்குள் வைத்திருந்த ராஜகுமாரி, 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்கை எய்தினார். ராஜகுமாரி இறுதிவரை திருமணமே செய்துகொள்ளமால் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top