கமல் போயாச்சி!. பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த போவது யார்?!.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன?!..

Published on: August 8, 2024
---Advertisement---

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே அதை நடத்தி வருபவர் நடிகர் கமல்ஹாசன்தான். இன்னும் சொல்லப்போனால் அவர் நடத்தியதேலேயே அந்நிகழ்ச்சி பிரபலமானது என்றும் சொல்லலாம். ஏனெனில், அப்போது கமல் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். மற்றொன்று இது போன்ற ஒரு டிவி நிகழ்ச்சியில் கமலை யாரும் பார்த்தது இல்லை.

இதனாலேயே அந்த நிகழ்ச்சியை பார்க்க பலரும் ஆர்வம் காட்டினார்கள். அதோடு, கமலின் அனுபவம், போட்டியாளர்களை அவர் அணுகும் முறை. அவரின் பேச்சில் இருக்கும் பக்குவம், தவறுகளை கூட நாசுக்கக சுட்டிக் காட்டும் அவரின் சாதுர்யம் என எல்லாமே ரசிகர்களை கவர்ந்தது.

இதனால், திங்கள் முதல் வெள்ளி வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட கமல் வருவர் என்பதற்காக சனி, ஞாயிறு நாட்களில் அவருக்காவே பார்த்தார்கள். கணிவு காட்ட வேண்டிய இடத்தில் கணிவும், கண்டிப்பை காட்ட வேண்டிய இடத்தில் கச்சிதமாக அதை காட்டினார் கமல்.

இதுவரை வெளியான 7 சீசன்களையும் கமலே நடத்தினார். 7வது சீசனில் பிரதீப் ஆண்டனியிடம் கமல் நடந்து கொண்டது சரியில்லை என்கிற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில்தான், விரைவில் துவங்கவுள்ள 8வது சீசனை சினிமா பணிகள் காரணமாக நான் நடத்தவில்லை என கமல் சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை வேறு மாதிரி திரித்தும் பலரும் சொல்லி வருகிறார்கள்.

ஒருபக்கம் கமல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதற்காக அமெரிக்கா செல்லவிருக்கிறார். அதனால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார் என சொல்கிறார்கள். ஒருபக்கம், இனிமேல் யார் நிகழ்ச்சியை நடத்துவார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

சிம்பு, சூர்யா, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி என பலரையும் யோசிக்க முடியும். ஏற்கனவே 2 நாட்கள் சிம்பு அந்நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். ஆனால், வொர்க் அவுட் ஆகவில்லை. சூர்யா வருவாரா என தெரியவில்லை. எப்போதும் நக்கலாகவே பேசும் பார்த்திபன் இதற்கு சரிபட்டு வருவாரா என்பதையும் யோசிக்க வேண்டி இருக்கிறது.

மற்றவர்களை ஒப்பிட்டால் விஜய் சேதுபதி சரியான சாய்ஸ் என பலரும் சொல்கிறார்கள். ஏனெனில், அவரின் பேட்டிகளை பார்க்கும்போது அவரிடம் பக்குவம் தெரிகிறது. எந்த கேள்விக்கும் நிதானமாக, தத்துவார்த்தமாக பதில் சொல்கிறார். எனவே, அவர் வந்தால் நிகழ்ச்சியை சரியாக நடத்துவார் என சிலர் நம்புகிறார்கள். விஜய் டிவியும் பல நடிகர்களுக்கும் வலை விரிக்கவிருக்கிறது.

அதேநேரம், யார் வந்தாலும் அது கமலை போல வருமா என தெரியவில்லை. யார் வந்தாலும் அவர்கள் கமலை மறக்க வைக்க வேண்டும். இல்லையேல், எத்தனை சீசன் வந்தாலும் கமலை போல இல்லை என ரசிகர்கள் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment