லியோ படத்தை பற்றி கிளம்பிய வதந்தி? முற்றுப்புள்ளி வைத்த மூத்த பத்திரிக்கையாளர்!
விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 2000 பேர் நடனமாடும் ஒரு பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம்.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை தொடங்கினார். அதன்படி அதற்கு முன்பு வெளிவந்த “கைதி” திரைப்படத்தின் ரெஃபரன்ஸ் “விக்ரம்” திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. அதே போல் “லியோ” திரைப்படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸிற்குள் இடம்பெறுமா? என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்து வருகிறது.
அதன்படி “லியோ” திரைப்படத்தில் கமல்ஹாசன் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தின் டீசர் வெளிவரவுள்ளது எனவும் அந்த டீசருக்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளார் எனவும் ஒரு தகவல் வெளிவந்தது. இத்தகவல் இணையத்தில் விஜய் ரசிகர்களால் வைரலாக பரப்பப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது வலைப்பேச்சு வீடியோவில் மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, இது குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “லியோ” டீசர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளிவரவுள்ளதாக வெளிவந்த தகவலும் கமல்ஹாசன் அந்த டீசருக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளார் என்ற தகவலும் முழுக்க முழுக்க வதந்தி என்று கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.