கே.பாலச்சந்தர் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி ரஜினி, சரத்பாபு, மீனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்து 1995ம் வருடம் வெளியான திரைப்படம்தான் முத்து.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ராதாரவி வில்லனாக நடிக்க, வடிவேலு, செந்தில் ஆகியோர் காமெடி படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி, தில்லானா தில்லானா போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. முத்து ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக இது அமைந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ‘ரஜினி சார் என்னை கூப்பிட்டு ‘ஒரு பணக்கார வீட்டில் ஒருத்தன் வேலை செய்றான். ஒருநாள் அவனுக்கும், அவன் முதலாளிக்கும் நடுவுல ஒரு பெண் வருகிறாள். கடைசில பார்த்தா அந்த வேலைக்காரன்தான் அந்த இடத்துக்கே சொந்தக்காரன்’ என்று ஒரு வரியில் ஒரு கதை சொன்னார்.
அவர் சொன்ன கதைக்கு நான் திரைக்கதை அமைத்து அதுதான் முத்து படமாக மாறியது. கடைசியில் பார்த்தால் அது ஒரு மலையாள படம் என்று எனக்கு தெரிந்தது. ரஜினி சார் என்னிடமே அதை சொல்லவில்லை என்று ரவிக்குமார் சொல்லியிருந்தார்.

மலையாளத்தில் வெளியான தேன்மாவின் கொம்பத் என்கிற படத்தை தமிழில் எடுத்து அதில் தான் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார் ரஜினி. அந்த படத்தை தமிழில் கொஞ்சம் மாற்றி எடுத்திருந்தார்.
படத்தின் பெயரை சொல்லி இருந்தால் அந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் பார்த்திருப்பார். எனவே அதன் பாதிப்புகள் திரைக்கதையில் வரலாம். அது வரக்கூடாது என்பதால்தான் ஒரு புது கதை போல சொல்லி கே.எஸ்.ரவிக்குமாரை அவரின் ஸ்டைலிலேயே திரைக்கதை அமைத்து ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் ரஜினி.
தேன்மாவின் கொம்பத் திரைப்படத்தை பிரியதர்ஷன் இயக்கி மோகன்லால், ஷோபனா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர், இந்த படம் 1994ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
