சர்ச்சையில் சிக்கிய டாப் நடிகர்களின் திரைப்படங்கள்… ஒரே கஷ்டமப்பா!!

by Arun Prasad |   ( Updated:2022-09-30 07:58:18  )
சர்ச்சையில் சிக்கிய டாப் நடிகர்களின் திரைப்படங்கள்… ஒரே கஷ்டமப்பா!!
X

தமிழில் சினிமாவுக்கு பஞ்சமில்லை என்பதுபோல சினிமா சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஒரு திரைப்படத்தின் கதையோ அல்லது குறிப்பிடத்தக்க வசனமோ சமூகத்தில் ஒரு தரப்பினருக்கு மனதை புண்படுத்துவதுபோல இருந்தால் அத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனஅந்த குறிப்பிட்டத் தரப்பினர் வழக்குத்தொடுப்பது சாதாரண விஷயம்தான். ஆனால் அந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து அந்த தரப்பினரை சமாதனப்படுத்தி அத்திரைப்படத்தை வெளியிடுவதுதான் சவாலான விஷயமே.

“விஸ்வரூபம்”, “பத்மாவதி” போன்ற திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். அப்படி சர்ச்சையில் சிக்கிக்கொண்டு மீண்டு வந்த டாப் நடிகர்களின் திரைப்படங்களை பார்க்கலாம்.

பராசக்தி

1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ் எஸ் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பராசக்தி”. இதுதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி.

திராவிட இயக்க கருத்துக்கள் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் இத்திரைப்படம் வெளியானது. இதில் இடம்பெற்ற கடவுள் சம்பந்தப்பட்ட வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் போராட்டங்கள் நடந்தன. எனினும் தணிக்கை குழுவின் தலைமை அதிகாரி இத்திரைப்படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லை என கூறிவிட்டதால் இத்திரைப்படம் சுமூகமாக வெளியானது.

பம்பாய்

1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, மனிஷா கொய்ராலா, நாசர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பம்பாய்”. இந்து-முஸ்லீம் கலவரத்தை அடிப்படையாக வைத்துத்தான் இத்திரைப்படம் உருவானது.

“பம்பாய்” திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டது. இத்திரைப்படம் “எங்கள் மனதை புண்படுத்துகிறது” என மஹாராஷ்டிராவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் போர் கொடி தூக்கினர். அதன் பின் இரு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று சில காட்சிகள் வெட்டப்பட்டு இத்திரைப்படம் வெளியானது. எனினும் கிட்டத்தட்ட ஒரு வாரம் வட இந்தியாவில் பல பகுதிகளில் இத்திரைப்படத்தை வெளியிட தடை போட்டு வைத்திருந்தார்களாம்.

ஹே ராம்

2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷாருக் கான் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஹே ராம்”. இத்திரைப்படம் காந்தியை தவறாக காட்டியதாக இந்தியா முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியது.

எனினும் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இத்திரைப்படத்தை திரையிட்டுக்காட்டிய பின்தான் இத்திரைப்படம் காந்திக்கு ஆதரவான திரைப்படம் என ஒத்துக்கொண்டார்களாம்.

விருமாண்டி

2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன், பசுபதி, அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “விருமாண்டி”. இத்திரைப்படத்திற்கு முதலில் சண்டியர் என பெயர் வைத்திருந்தனர். இந்த பெயர் சர்ச்சைக்குரிய பெயராக இருப்பதால் இந்த பெயரை மாற்றவேண்டும் என எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின்தான் இத்திரைப்படத்தின் பெயர் “விருமாண்டி” என மாற்றப்பட்டது.

தலைவா

2013 ஆம் ஆண்டு விஜய், அமலா பால், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “தலைவா”. இத்திரைப்படத்தின் தலைப்பில் “Time to lead” என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் இது அன்றைய ஆளுங்கட்சிக்கு எதிரான திரைப்படம் என்ற வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து ஒரு வாரம் கழித்து இத்திரைப்படம் ஒரு வழியாக வெளியானது. ஆனால் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திருட்டு டிவிடிக்களில் வெளியானதால் படம் தோல்வியை தழுவியது.

Next Story