முதல்ல எனக்கு செட்டில் பண்ணுங்க!.. விடாமுயற்சிக்கு வேட்டு வைத்த உதயநிதி!.. ஷூட்டிங் நடந்த மாதிரிதான்!

சினிமா என்பது கோடிகள் புரளும் தொழில். அதுவும், ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களை வைத்து படமெடுத்தால் சில நூறு கோடிகள் தேவைப்படும். ஹீரோக்களின் சம்பளமே 100 கோடிக்கும் மேல். அதோடு, படத்தின் படப்பிடிப்பு பணத்தால் நிற்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதனால்தான் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே தங்களின் கால்ஷீட்டை கொடுக்கிறார்கள். ஏஜிஎஸ், லைக்கா, சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள்தான் பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கும் நிலையில் இருக்கிறது. அப்படி லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் திரைப்படம்தான் விடாமுயற்சி.
இதையும் படிங்க: அர்ஜூனால் ஸ்தம்பித்து நிற்கும் ‘விடாமுயற்சி’! இருக்குற பிரச்சினை போதாதுனு இது வேறயா?
துவக்கம் முதலே இந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பனிப்புயல், மழை போன்ற காரணங்களால் அசர் பைசான் நாட்டில் நடந்த படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பின் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் ஒரு மாதத்திற்கும் மேல் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை.
லைக்கா நிறுவனம் ஒரே நேரத்தில் ரஜினியின் வேட்டையன், கமலின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி ஆகிய 3 படங்களை தயாரித்து வந்தது. ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால்தான் விடாமுயற்சி படப்பிடிப்பு தடைபட்டது. இந்தியன் 2 படத்தையும் தொடர முடியவில்லை.
அப்போதுதான் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தியன் 2 படத்தில் முதலீடு செய்தது. அதன்பின்னரே அந்த படம் டேக் ஆப் ஆனது. ஆனால், விடாமுயற்சி டேக் ஆப் ஆகவில்லை. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க போனார் அஜித். ஒரு செட்யூல் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இப்போது அவர் விடாமுயற்சிக்கு கால்ஷீட் கொடுக்க தயாராக இருக்கிறார். இப்போது அஜித்தை விட்டால் குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டுதான் அவர் வருவார்.
இந்நிலையில்தான், இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கும் என செய்திகள் வெளியானது. இந்தியன் 2 படத்தை வியாபாரம் செய்து அதில் வரும் பணத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிடலாம் என லைக்கா திட்டமிட்டது.
ஆனால், ‘நாங்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்த பின்னர் நீங்கள் எடுத்துகொள்ளுங்கள்’ என உதயநிதி சொல்லிவிட்டதால் கையை பிசைந்து நிற்கிறது லைக்கா நிறுவனம். விடாமுயற்சி படத்தை எப்படியாவது முடித்து தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறது லைக்கா. ஆனால், நடப்பதையெல்லாம் பார்த்தால் அது நடக்குமா என்பது தெரியவில்லை.