இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இந்திய சினிமா உலகில் தலைவர் என்றால் எல்லா நடிகர்களுக்கும் நினைவுக்கு வருவது ரஜினிதான். கடந்த 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 74 வயதிலும் இன்னமும் ஹீரோவாக நடித்த வருகிறார் ரஜினி.
தான் நடிக்கும் திரைப்படத்தோடு நின்றுவிடாமல் அவ்வப்போது வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படம் நன்றாக இருந்தால் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அப்படி இதுவரை பல படங்களை பாராட்டி இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில்தான் சமீபத்தில் சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான பராசக்தி படத்தை பார்த்த ரஜினி சிவகார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்டு ‘இது ஒரு தைரியமான முயற்சி.. இரண்டாம் பாதியாக அருமையாக இருந்தது.. உங்களின் நடிப்பு அபாரம்’ என்று பாராட்டியிருந்தார் இந்த தகவலை பராசக்தி படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருந்தார்.
இதை கையில் எடுத்துள்ள விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் ‘ பராசக்தி படத்துக்கு ரஜினி வாழ்த்து சொல்கிறார்.. ஆனால் ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் சிக்கி வெளிவராமல் இருக்கிறது.. அது பற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார்.. அதுபற்றி வாயை திறக்கவில்லை’ என கோபத்தை காட்டி வருகிறார்கள்.