வெற்றி வாகை சூட களத்தில் குதிக்கும் தனுஷ்... 50வது படத்துக்காக அவர் எடுக்கும் ரிஸ்க் கைகொடுக்குமா?
பொதுவாக ஜூபிளி படங்கள் என்றாலே பெரும்பாலானோருக்கு பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கத் தவறி விடுகிறது. தெலுங்குப்பட உலகில் வெங்கடேஷ் நடித்த 75வது படம் சைந்தவ் படு தோல்வியைத் தழுவியது. அதே போல நானியின் 25வது படம் வி யும் தோல்வி. தமிழ்ப்பட உலகை எடுத்துக் கொண்டால் ரஜினியின் ராகவேந்திரா அவரது 100வது படம். கமலின் ராஜபார்வை அவருக்கு 100வது படம். ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் தானோ என்னவோ D50 ல் தனுஷ் கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார்.
தமிழ்சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் தனுஷ் நடிப்புக்காக தேசிய விருது, பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது தனுஷ் தனது 50வது படத்தைத் தொட்டு விட்டார். சன்பிக்சர்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சுந்தீப் கிஷன், நித்யா மேனன், காளிதாஸ் ஜெயராம் உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
இவர் தற்போது நடித்து வரும் அந்த 50வது படம் ராயன். தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளன. இந்தப் படத்தில் கதை, திரைக்கதை எழுதி இயக்க உள்ளார் தனுஷ்.
இதற்கு முன்னதாக பா.பாண்டி என்ற படத்தை இயக்கி அதில் கேமியோ ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல விஐபி 2 ல் திரைக்கதை எழுதினார். அந்த வகையில் இப்போது அவரே படத்தில் ஹீரோவாக நடித்து இயக்க உள்ளார். பெரும்பாலும் நடிகரே இயக்கி நடிக்கும்போது மற்ற கதாபாத்திரங்களில் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அஜய் தேவ்கன், பிருத்திவிராஜ் சுகுமாறன் போன்ற நடிகர்கள் மட்டும் இதில் விதிவிலக்கு. பிளாக்பஸ்டர் ஹிட்டுகளையும் கொடுத்துள்ளனர். இந்த வரிசையில் தனுஷ_ம் இடம்பிடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.