Parasakthi: பல வசனங்கள் மாற்றம்.. நீக்கம்!… 25 திருத்தங்களுடன் வெளியாகும் பராசக்தி!..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்து பராசக்தி படம் உருவாகியிருக்கிறது. இந்த படம் ஜனவரி 10-ம் தேதியான நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நேற்று வரை இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.

இந்த படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல மாற்றங்களை தணிக்கை வாரியம் செய்ய சொல்லியிருக்கிறது. அதில் பலவற்றுக்கு சுதா கொங்கரா எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. எனவே, பராசக்தி திட்டமிட்டபடி வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்தது.

ஆனால், இன்று காலை பராசக்தி படத்திற்கு தணிக்கை சாரியம் சான்றிதழ் கொடுத்தது. இதையடுத்து படம் நாளை வெளியாவது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்தான் இந்த படத்தில் பல மாற்றங்களை தணிக்கை வாரியம் செய்ய வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக பல முக்கியமான வசனங்களை தணிக்கை வாரியம் மாற்ற வைத்திருக்கிறது.

‘இந்தி என் கனவை அழித்தது’ என்கிற வசனத்திற்கு பதிலாக ‘என் ஒரே கனவை இந்தி எரித்தது’ என மாற்றியிருக்கிறார்கள். அண்ணாவின் ‘தீ பரவட்டும்’ என்கிற வாசகம் ‘நீதி பரவட்டும்’ என மாற்றியிருக்கிறார்கள்.
மேலும் வரலாற்று முக்கியமாய்ந்த ‘இங்கு யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்’ என அறிஞர் அண்ணா சொன்ன 22 வினாடி வசனத்தை பராசக்தி படத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

மேலும், ‘இந்தி அரக்கி’ என்கிற பதாகை உள்ள காட்சி நீக்கம்.. இந்தி என்ற வார்த்தை சப் டைட்டிலில் பல இடங்களில் நீக்கம்.. துப்பாக்கிச் சூட்டில் தன் குழந்தையுடன் தாய் இறந்து போகும் காட்சி நீக்கம்… ஒரு மொழியை திணிப்பது அந்த நாட்டின் சிதைவுக்கு வழிவகுக்கும்’ என வாய்ஸ் ஓவரில் மாற்றம் என 25 இடங்களில் தணிக்கை வாரியம் மாற்றங்களை செய்ய வைத்திருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது படைப்பு சுதந்திரத்தை தணிக்கை வாரியம் மதிக்கவில்லை.. இவ்வளவு மாற்றங்கள் செய்து படம் வெளியாவதால் படம் எடுக்கப்பட்ட நோக்கமே சிதைந்து போகும்.. இது அராஜகம்’ என சினிமா ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.