விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இருப்பதுதான் தற்போது சினிமா ரசிகர்களிடம் பேச்சு பொருளாக மாறியிருக்கிறது. கடந்த டிசம்பர் 18ம் தேதி படக்குழு தணிக்கை வாரியத்தை நாடியது. படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் சில மாற்றங்களை செய்ய சொன்னார்கள்.
அதை செய்து டிசம்பர் 25ம் தேதி மீண்டும் தணிக்கைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அப்போது U/A சான்றிதழ் கொடுப்பதாக சொன்ன தணிக்கை வாரிய அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்கவிலலி. தயாரிப்பு நிறுவனம் கேட்டதற்கு படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் ஐந்து பேரில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என கூறியது. இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்றது.
அந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு சொன்ன தனி நீதிபதி பிடி.ஆஷா ஜனநாயகன் படத்தில் உடனே தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், படத்திற்கு சான்றிதழ் கொடுப்பதாக அறிவித்துவிட்டு மீண்டும் மறு தணிக்கை என்ற சொல்வதை ஏற்க முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அது தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதித்தார்.
அதோடு, ஜனவரி 21ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதால் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளியாகாது என்பது உறுதியாகியிருக்கிறது. இது தீர்ப்பு எப்படியும் சாதகமாக வரும். பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.




