Connect with us

Cinema News

“இப்படி ஒரு எண்ணத்துல படத்துக்கு வராதீங்க…” பத்திரிக்கையாளரிடம் கொதித்தெழுந்த கார்த்தி..

மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற ஐந்து மொழிகளில் வெளிவருகிறது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது.

“பொன்னியின் செல்வன்” நாவலை எம் ஜி ஆர், கமல் ஹாசன் என பலரும் திரைப்படமாக்க முயன்றனர். ஆனால் எவருக்கும் கைக்கூடவில்லை. இந்த நிலையில் தான் மணி ரத்னம் கடந்த 2008 ஆம் ஆண்டு “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக்க முயன்றார். விஜய், மகேஷ் பாபு, ஐஸ்வர்யா ராய் போன்றோர் அத்திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் அத்திரைப்படம் பேச்சுவார்த்தைகளோடு நின்றுபோனது. இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் கொரோனா ஊரடங்கு வந்தது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக முடங்கியது. அதனை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த வருடம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இத்திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது.

இத்திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் Pre release event நடைபெற்றது. அப்போது ஒரு பத்திரிக்கையாளர் நடிகர் கார்த்தியிடம் “கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹாரி பாட்டர் என பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் கூட வெக்கை என்ற நாவலை திரைப்படமாக எடுத்தார். ஆனால் அந்த நாவல்களை படித்தவர்களுக்கு படம் திருப்தியாக இல்லை என கூறப்படுகிறது. இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இது வாசகர்களுக்கு திருப்தியை கொடுக்குமா?” என ஒரு கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கார்த்தி “இத்திரைப்படம் என்பது ஒரு 60 வருட கனவு. இதனை மணி ரத்னம் சாத்தியமாக்கியுள்ளார். தயவு செய்து இத்திரைப்படத்திற்கு மார்க் போடுவதற்காக வராதீர்கள். இத்திரைப்படம் என்பது ஒரு அனுபவம். அதனை அனுபவியுங்கள்.

இயக்குனர் மணி ரத்னத்தின் அனுபவம் மிகப்பெரியது. அப்படிப்பட்ட அனுபவசாலி இத்திரைப்படத்தை இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்” என வீராவேசத்துடன் பேசினார்.

“பொன்னியின் செல்வன்” நாவலை மணி ரத்னம் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்தபோதே இணையத்தில் “நாவலை கெடுத்துவிடுவார்கள்” போன்ற  விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. இதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல் தற்போது கார்த்தி பதில் அளித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top