கருப்பு ரிலீஸ் தேதியில் குழப்பம்!.. தீபாவளிக்கு வருமா? வராதா?!.. இதுதான் காரணமா?!..
Karuppu: காமெடி நடிகராக சில படங்களில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து மூக்குத்தி அம்மன் 2 கதையை எழுதினார். இதிலும் நயன்தாராவே நடிப்பதாக இருந்தது. ஆனால். இப்படத்தை தயாரிக்கவிருந்த ஐசரி கணேஷுக்கும் பாலாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த படத்திலிருந்து பாலாஜி விலகினார்.
எனவே, அவருக்கு பதில் சுந்தர்.சி-யை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து வருகிறார். பாலாஜி ஒருபக்கம் தான் எழுதிய கதையில் பெண் கதாபாத்திரத்தை தூக்கிவிட்டு அதை ஆணாக மாற்றி சூர்யாவை வைத்து கருப்பு படமாக எடுத்திருக்கிறார்.
நியாயத்திற்காக போராடும் வக்கீல் மற்றும் தன்னை நம்பி கஷ்டங்களை சொல்லும் பக்தர்களின் குறைகளை நிறைவேற்றும் கருப்பசாமி என இரண்டு வேடங்களில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. எனவே, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை வெளியான கருப்பு டீசர் வீடியோவில் ரிலீஸ் தேதியை குறிப்பிடுவார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரிலீஸ் எப்போது என்கிற அப்டேட் டீசரில் இல்லை.
படத்தின் ஓடிடி உரிமை இன்னமும் விற்கப்படவில்லை என்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. எல்லாம் கூடி வந்தால் கருப்பு தீபாவளிக்கு வெளியாகும். இல்லையெனில் 2026ம் வருடம்தான் ரிலீஸ் என்கிறார்கள்.