இது நடந்தா நான் உயிரோடு இருக்க மாட்டேன்!.. கமல் ஃபீல் பண்ணி பேசிட்டாரே!...
4 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய கலைப்பயணம் இன்னமும் நிற்கவில்லை. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த கமல் ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். பாலச்சந்தர் இவரை ஒரு முழு நடிகராக மாற்றினார். துவக்கத்தில் ரஜினியுடன் இணைந்து தொடர்ந்து நடித்து வந்த கமல் ஒரு கட்டத்தில் தனியாக நடிக்க துவங்கினர்.
80களில் கமலின் அடையாளம் நடனமாக இருந்தது. கமல் படம் என்றாலே மைக்கை பிடித்துக்கொண்டு கண்டிப்பாக ஒரு பாட்டுக்கு நடனமாடுவார். ஒருகட்டத்தில் ஆனந்த பாபு, மோகன் போன்ற நடிகர்கள் வந்த பின் அது மாறியது. கமலும் தனக்கு பிடித்த கதைகளில் நடிக்க துவங்கினார்.
மற்ற மொழிப்படங்களை பார்ப்பதில் அதிகம் கொண்ட கமல் தமிழ் சினிமாவிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வரவேண்டும், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மேம்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்காக பல பரிசோதனை முயற்சிகளை செய்துபார்த்தார். பேசாமலேயே பேசும் படம் எடுத்தார். நாயகன், அபூர்வ சகோரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களுக்கு புதிய அனுபவங்களை கொடுத்தார்.
சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே முதலீடு செய்யும் ஒரே நடிகர் கமல் மட்டுமே. சினிமாவை தவிர அவருக்கு வேறு எதிலும் ஆர்வம் இல்லை. அவரின் முதலீடுகள் எல்லாமே சினிமாவில் மட்டுமே இருக்கிறது. ஹேராம் போன்ற படங்களால் நஷ்டத்தையும் பார்த்திருக்கிறார். ஆனால், சினிமா எடுப்பதை அவர் நிறுத்தவில்லை.
விக்ரம், அமரன் போன்ற படங்களை தயாரித்த கமல் இப்போது தக் லைப் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். சென்னையில் துவங்கிய புரமோஷன் கேரளா, மும்பை என தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், கொச்சியில் நடைபெற்ற தக் லைப் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல் ‘நடிப்பில் இருந்து நான் எப்போதும் ஓய்வு பெற மாட்டேன். அப்படி ஓய்வு பெற்றால் அன்று நான் இறந்திருப்பேன்’ என பேசியிருக்கிறார். கமலின் வயதுள்ள நடிகர்கள் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது கமல் இன்னமும் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.