மணி சார் என்னை கூப்பிடல!.. அந்த படம் பாத்துட்டு அழுதேன்!.. சிம்பு சொன்ன பிளாஷ்பேக்!...
Simbu Manirathnam: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். பாலிவுட் சினிமாகாரர்கள் இன்னும் தமிழ் சினிமாவில் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள் எனில் அதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். ரோஜா, இருவர், பம்பாய், நாயகன், தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கியவர்.
இந்திய சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனராக பல வருடங்கள் இருந்தவர் இவர். இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என எல்லா நடிகர், நடிகைகளும் ஆசைப்படுவார்கள். ஐஸ்வர்யா ராயை இருவர் படத்தில் அறிமுகம் செய்து வைத்தவர் இவர். இவர் நடிக்க கூப்பிட்டால் ஹிந்தி, தெலுங்கு, கேரளா என எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகர்களும் ஓடி வருவார்கள். அதுதான் மணிரத்னம் மீதுள்ள இமேஜ்.
தமிழ் சினிமாவில் புதுமையான முயற்சிகளை செய்து பார்த்தவர் இவர். இவர் இயக்கிய படங்கள் குறைவு என்றாலும் பேசப்படும் இயக்குனர் இவர். இப்போது கமல், சிம்புவை வைத்து தக் லைப் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தில் அபிராமி, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
சிம்புவை வைத்து ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த படமும் வெற்றி பெற்றது. தக் லைப் படத்தில் சிம்புவுக்கு முக்கியமான வேடம். கமலுக்கே வில்லனாக நடித்திருக்கிறார். சிம்பு மீது மணிரத்னத்துக்கு அதீத நம்பிக்கை உண்டு. திரையுலகில் சிம்புவுக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டு, சிம்பு பக்கம் யாருமே போகாத நிலையில் அவரை செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்க வைத்தார் மணிரத்னம். இதை மேடையில் சொல்லி சிம்பு நன்றியும் சொல்லியிருந்தார்.
தக் லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பல மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அப்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு ‘அஞ்சலி படத்துல அந்த சின்ன பொண்ணோட அண்ணனா ஒரு சின்ன பையன் நடிச்சிருப்பான். அந்த படம் பார்த்துட்டு அந்த வேடத்தில் நடிக்க மணி சார் என்னை ஏன் கூப்பிடலனு அழுதேன். என் அப்பாவும், அம்மாவும் என்னை சமாதானப்படுத்தினாங்க’ என சொல்லி சிரித்தார். அவர் சொன்னதை கேட்டு மணிரத்னமும் சிரித்தார்.
மேலும், ‘சரி. என்னையெல்லாம் அவர் கூப்பிடவே மாட்டார்னு நினைச்சேன். ஏன்னா நான் நடிச்சதெல்லாம் மாஸ், மசாலா படங்கள்தான். ஆனால், செக்கச் சிவந்த வானம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்’ என நெகிழ்ச்சியோடு பேசினார்.