அட்லீ - அல்லு அர்ஜூன் பட தலைப்பு இதுவா?!.. பேன் இண்டியா படத்துக்கு செம டைட்டில்!..
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் அட்லீ. ஷங்கரிடம் சினிமா கற்றுக்கொண்டவர் என்பதால் அவரை போல அதிக பட்ஜெட்டுக்களில் படமெடுப்பவர். இவர் செய்யும் செலவு இவர் படங்களில் வரும் காட்சிகளில் நன்றாகவே தெரியும். அதேநேரம் ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் கதையை உல்டா செய்து படமாக எடுக்கிறார் என்கிற புகாரும் இவர் மீது உண்டு.
மௌன ராகத்தை வைத்து ராஜா ராணி, அபூர்வ சகோதரர்கள் படத்தை வைத்து மெர்சல், சத்ரியனை வைத்து தெறி, ஷாருக்கானின் சக்தே இண்டியாவை வைத்து பிகில் என படங்களை இயக்கினார். ஆனால், தான் காப்பி அடித்து படமெடுப்பதை எப்போதும் ஒப்புக்கொள்ளமாட்டார். என்னை பற்றி விமர்சனங்கள் செய்பவர்கள் செய்யட்டும். நான் மேலே போய்க்கொண்டிருப்பேன் என தத்துவம் சொல்வார்.
விஜயை வைத்து 3 படங்களை இயக்கியதால் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக மாறினார். அதேநேரம், அதிக பட்ஜெட்டுக்களில் படமெடுப்பதால் இவரை வைத்து படமெடுக்கவே தயாரிப்பாளர்கள் யோசித்தனர். எனவே, பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார்.
இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து 1300 கோடி வரை வசூல் செய்தது. இதன் மூலம் பேன் இண்டியா அளவில் கவனிக்கப்பட்டார். பாலிவுட் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களும் அட்லி இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர். பல முயற்சிகளுக்கு பின் புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் அட்லீ.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. ஹாலிவுட் கதாசிரியர் ஒருவருடன் இணைந்து இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் அட்லீ. மிகவும் அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் அதிக அளவில் ஹாலிவுட் கலைஞர்கள் வேலை செய்யவிருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த படத்திற்கு ‘ஐகான்’ என தலைப்பு வைக்கலாம் என அட்லீ யோசித்து வருகிறாராம். அல்லு அர்ஜூனுக்கு ஐகான் ஸ்டார் என்கிற பட்டப்பெயரும் ஆந்திராவில் உண்டு. எனவே, அவரின் ரசிகர்கள் சுலபமாக படத்தில் கனெக்ட் ஆவார்கள். அதோடு, பேன் இண்டியா படமாக உலக அளவில் இப்படம் வெளியாகவுள்ளதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறார்களாம். அதேநேரம் இதுதான் தலைப்பா? இல்லை மாற்றுவார்களா? என்பது படக்குழு அறிவிக்கும்போது தெரியவரும்.