விக்ரம் குறித்த கேள்வி!.. ஆனா இப்படி ஒரு பதில பாலா கிட்ட இருந்து எதிர்பார்க்கலையே?..

By :  Ramya
Update: 2024-12-29 07:30 GMT

actor Vikram

இயக்குனர் பாலா: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட இயக்குனர்களில் இவரும் ஒருவர். பாலு மகேந்திராவிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றி வந்த இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த சேது என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

இவரின் படைப்புகள் அனைத்துமே வித்தியாசமானதாகவும் அழுத்தமான கதைக்களத்தை கொண்டதாகவும் இருக்கும். இவரின் இயக்கத்தில் வெளிவந்த நந்தா, பிதாமகன், நான் கடவுள், தாரை தப்பட்டை, பரதேசி உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக இருக்கும். இவரின் திரைப்படங்களில் நடித்த பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள்.


அந்த வரிசையில் நாம் பல நடிகர்களை கூறலாம். நடிகர் விக்ரம் தொடங்கி சூர்யா, ஆர்யா, விஷால் என்று சொல்லிக் கொண்டே போகலாம். திறமை இருந்தும் சினிமாவில் வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பல கலைஞர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் இயக்குனர் பாலா. தமிழ் சினிமாவில் இவர் இயக்குவது போன்ற திரைப்படங்களை யாராலும் இயக்க முடியாது. அந்த அளவுக்கு ஒரு வித்தியாசமான மனிதர்.

வணங்கான்: இயக்குனர் பாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வணங்கான் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். முதலில் இந்த திரைப்படத்தை சூர்யாவை வைத்து இயக்கி வந்த நிலையில் பின்னர் சில காரணங்களால் சூர்யா அப்படத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் இந்த திரைப்படத்தை நடிகர் அருண் விஜயை வைத்து இயக்கி முடித்து இருக்கின்றார் இயக்குனர் பாலா.

இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வணங்கான் படத்தின் ஆடியோ லான்ஞ்சாக மட்டுமல்லாமல் பாலா இயக்குனராகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விழாவாகவும் சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பாலா குறித்து நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்கள்.

பாலா இன்டர்வியூ: இயக்குனர் பாலா சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நீயா நானா கோபிநாத் இயக்குனர் பாலாவிடம் சில கேள்விகளை கேட்டார். அதாவது நடிகர்களின் பெயரை கூற அவர்கள் குறித்து பாலா அவரின் கருத்தை முன் வைத்தார். அந்த வகையில் முதலில் நடிகர் சூர்யாவின் பெயரை கூற தமிழ் சினிமாவிலேயே எனக்கு பிடித்த நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் சூர்யா தான் என்று கூறியிருந்தார்.

அடுத்ததாக ஆர்யா பெயரை சொன்னவுடன் மிகவும் டெடிகேஷனான ஒரு நபர். இதை செய்து முடிப்பது கஷ்டம் என்று சொன்னால் என்னால் முடியும் என்று அதை கஷ்டப்பட்டு முயற்சி செய்து செய்து காட்டக்கூடிய ஒரு நடிகர் என்று பதில் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து சியான் விக்ரம் பெயர் கேட்கப்பட்டது.


அதற்கு நீண்ட நேரம் யோசித்த பாலா எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கின்றது பார்த்தீர்களா அதுதான் பதில் என்று கூறியிருந்தார். இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மற்ற நடிகர்களின் பெயரை சொன்னவுடன் தனது கருத்தை முன்வைத்த பாலா விக்ரம் பெயரை சொன்னவுடன் எந்த பதிலையும் கூறாமல் இருந்தது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Tags:    

Similar News