5 பாட்டுக்கு மட்டும் இவ்வளவு கோடி செலவா?!.. ஆந்திரா போயும் அடங்காத ஷங்கர்!....
அதிக பட்ஜெட்டில் இப்போது பல இயக்குனர்கள் படமெடுத்தாலும் 90களிலேயே அதற்கு அடித்தளம் அமைத்தவர் இயக்குனர் ஷங்கர்தான். இவர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படமே அதிக பட்ஜெட்டில் உருவானது. அதற்கு காரணம் அந்த படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.
அடுத்து ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படமும் அதிக பட்ஜெட்டில் உருவானது. அதன்பின் ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், முதல்வன், சிவாஜி, எந்திரன், 2.0, ஐ என அதிக பட்ஜெட் திரைப்படங்களை இயக்கினார் ஷங்கர். ஒரு பாடலுக்கே அதிக செலவு செய்வதில் ஷங்கருக்கு நிகர் அவர் மட்டுமே.
ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த சிவாஜி படத்திலும் எல்லா பாடல்களையும் அதிக செலவு செய்தே எடுத்தார் ஷங்கர். அவர் செய்யும் செலவை பார்த்து ஏவிஎம் நிறுவனமே பயந்து போனது. அந்த படத்திற்கு பின் பெரிய ஹீரோக்களை வைத்து படமே எடுக்கக் கூடாது என்கிற முடிவை ஏவிஎம் நிறுவனம் எடுத்தது. அந்த அளவுக்கு பயம் காட்டினார் ஷங்கர்.
விக்ரம் நடித்த ஐ படத்திலும் அப்படித்தான் அதிக செலவு செய்து பாடல் காட்சிகளை எடுத்தார். ஷங்கர் படங்களில் பாடல்கள் மிகவும் அழகாக எடுக்கப்பட்டிருக்கும். கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விஸ்வல் ட்ரீட்தான் என்றாலும் தயாரிப்பாளர் வயிற்றில் செலவு புளியை கரைக்கும்.
ரயிலுக்கு பெயிண்ட் அடிப்பது, பாலத்திற்கு பெயிண்ட் அடிப்பது, இதுவரை யாரும் போகாத வெளிநாடுகளுக்கு சென்று பாடல் காட்சிகளை எடுப்பது, பாடல் காட்சிகளில் கிராபிக்ஸ் செலவு பல லட்சம் என அதிரவைப்பார் ஷங்கர். ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படமும் அதிக செலவில் எடுக்கப்பட்டது. ஆனால், படம் ஓடவில்லை.
ஒருபக்கம், ஆந்திரா பக்கம் போய் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஷங்கர். இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஒவ்வொரு பாடல் காட்சிகளுக்கும் பல கோடிகளை செலவு செய்திருக்கிறார் ஷங்கர். குறிப்பாக ‘ஹைரனா’ என்கிற ஒரு பாடலுக்கு மட்டும் 17.60 கோடி செலவு செய்திருக்கிறாராம் ஷங்கர்.
இந்த பாடல் காட்சிகளை நியூஸ்லாந்து சென்று 5 நாட்கள் படமாக்கியிருக்கிறார்கள். அங்குள்ள அழகான இடங்களில் காட்சிகள் மிகவும் அழகாக வந்திருக்கிறதாம். இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இந்த 5 பாடல்களுக்கும் சேர்த்து 90 கோடி வரை ஷங்கர் செலவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கேம் சேஞ்சர் திரைப்படம் 2025 ஜனவரி 10ம் தேதி வெளியாகியுள்ளது.