உயிரிழந்த பெண்ணிற்கு புஷ்பா 2 படக்குழு நிவாரணம்!.. எத்தனை கோடினு பாருங்க!..
புஷ்பா 2: இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா 2. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து தங்களது வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தெலுங்கு மொழியை தாண்டி ஹிந்தியில் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் படம் புதிய சாதனையை படைத்திருக்கின்றது. கிட்டத்தட்ட 1600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. விரைவில் 2000 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கூட்ட நெரிசல்:
டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்னதாக அதாவது டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படம் ஸ்பெஷல் காட்சியாக திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு அல்லு அர்ஜுன் வர இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அங்கு அவரின் ரசிகர்கள் லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கின்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வழக்கு பதிவு:
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அல்லு அர்ஜுனை கைது செய்தார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து ஜாமீன் வழங்க கோரி மனு அளித்திருந்த நிலையில் உயர்நீதிமன்றம் அவருக்கு 4 வாரத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. பின்னர் மறுநாளே சிறையில் இருந்து அவர் வெளியில் வந்தார்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அம்மாநிலத்தின் முதல்வரான ரேவந்த் ரெட்டி தொடர்ந்து அல்லு அர்ஜுன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அல்லு அர்ஜுன் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கத்தான் திரையரங்கு சென்றேன்.
ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக மூன்று ஆண்டுகள் சிரமப்பட்டு புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்தேன். கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடைய திரைப்படம் வெளியான போது அதே நாள் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துள்ளேன். ஆனால் இந்த முறை எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டதும் நான் மிகவும் கவலை அடைந்தேன் என்று கூறியிருந்தார்.
மேலும் இந்த சம்பவம் நடந்த மறுநாளே அல்லு அர்ஜுன் தனிப்பட்ட முறையில் அவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி கொடுத்திருந்த நிலையில் தற்போது படக்குழுவினர் 2 கோடி ரூபாய் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாயும், இயக்குனர் சுகுமார் 50 லட்சமும், மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 50 லட்சமும் கொடுத்துள்ளது.