பாடும் நிலாவையே மிரள வைத்த இசைஞானி... இளமை இதோ இதோ பாடலின் பின்னணி...
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று நெல்லையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருக்க இடம் கூட கிடைக்காமல் நின்றபடி பலரும் ரசித்தனர். மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி சரியாக 10 மணிக்கு முடிந்தது. இசை மழையில் ரசிகர்களை நனைய வைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா என்றே சொல்ல வேண்டும்.
ஆட்டம்: நெல்லை மக்களுக்கு இது புதுசு என்பதால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். ஏஞ்சோடி மஞ்சக்குருவி, காட்டுக்குயிலு போன்ற பாடல்களுக்கு அவர்கள் போட்ட ஆட்டம் சொல்லி மாளாது. இளையராஜாவும் அவ்வப்போது சில சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
வழக்கமாக 'ஜனனீ ஜனனீ' பாடலுடன் தொடங்கிய இளையராஜா அடுத்த பாடலில் ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொண்டு வர நான் கடவுள் 'ஓம் சிவோஹம்' என்ற பாடலைப் போட்டார்.
இளமை இதோ இதோ: அதன்பிறகு ரசிகர்களைக் குஷி படுத்த வேண்டும் என்று ஹேப்பி நியூ இயர் இளமை இதோ இதோ என்று கமலின் அக்மார்க் பாடலைப் போட்டார். எஸ்.பி.சரண் பாடினார். இந்தப் பாடலைப் பற்றி இளையராஜா பேசும்போது இந்தப் பாடல் கம்போசிங்கின்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு அந்த தகஜிகு தகஜிகுக்கு அவ்வளவு ரிகர்சல் கொடுத்தோம்.
பயந்த பாலு: அவரும் ஒரு கட்டத்தில் பயந்தபடி என்ன இப்படி சொல்றீங்களே என்று ஒரு வழியாக சிரத்தையுடன் பயிற்சி எடுத்து பாடி முடித்தார். அந்த 'தகஜிகு தகஜிகு' மட்டும் ஒன்றரை பக்கத்துக்கு நோட்ஸ் வரும். அதைப் பார்த்த போது முதலில் பாலு பயந்தே போய்விட்டார். அப்புறம் நாங்க கொடுத்த உற்சாகத்தில் பாடி முடித்தார். எனக்கு திருப்தி வர்ற வரைக்கும் விடமாட்டேன்.
எஸ்.பி.சரண்: அது பாலுவா இருந்தாலும் சரி. அவங்க மகனா இருந்தாலும் சரி என்று இளையராஜா சிரித்தபடி சொன்னார். அப்போது எஸ்.பி.சரண் சிரித்துக்கொண்டார். அவரும் 'எங்க அப்பா தான் உங்கக்கிட்ட பாட அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்' என்றார்.
'ஏன்... ஜாலியா பாடிட்டுப் போக வேண்டியதுதானே'ன்னு சொன்னார் இளையராஜா. அதான் 'அந்த தகஜிகு தகஜிகு இருக்குல்ல'ன்னு சிரித்தபடி சொன்னார். பாடும் நிலா என்றால் பாலுதான். அவருக்கே இந்த நிலைமையா என்றே எண்ணத் தோன்றுகிறது.