Pushpa2: புஷ்பா 2 படத்தின் 3வதுநாள் கலெக்ஷன்... சும்மா தெறிக்கவிடுறாங்களே...!
புஷ்பா 2 படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 3வது நாளில் என்ன கலெக்ஷன்னு பாருங்க.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடித்து பிரம்மாண்டமாக வெளியான படம் புஷ்பா2. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படம் கடந்த 5ம் தேதி வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.
முதல்நாளே பெரும் கூட்டம். ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் படம் பார்க்க சென்றுள்ளார். அவரைப் பார்க்க வேண்டும் என்றும் கூட்டம் திரண்டு ஒரு நடுத்தர வயது பெண் நெரிசலில் சிக்கி பலியானார். அவரது 9 வயது மகனும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த பதற்றம் காணாது என்று மும்பை பாந்த்ராவில் உள்ள ஒரு திரையரங்கில் ஸ்பிரே அடித்து கூட்டத்தைக் கலைத்து விட்டார்கள். இந்த நிலையில் பெண் பலியானதற்கு அல்லு அர்ஜூன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஜோடியின் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றும் பாட்டு, பைட் சூப்பர் என்றும் விமர்சனம் வந்தன. படத்தில் அல்லு பெண் வேடமிட்டு ஆடும் பாடலுக்கு தியேட்டரிலேயே ஒரு பெண் சாமி ஆடி இருக்கிறாள். அந்த வீடியோவும் வைரலானது.
பாடலுக்கு நடன அசைவுகள் பிரமாதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத், சாம் சிஎஸ்சின் இசை பிரமாதமாக உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை இல்லாத வகையில் படம் கலெக்ஷனை அள்ளி வருகிறது. முதல் நாளிலேயே பாகுபலி2, கேஜிஎப்2, காந்தராவின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது புஷ்பா2. அந்த வகையில் கடந்த 3 நாள்களாக படத்தின் வசூல் விவரத்தைப் பார்ப்போமா...
முதல் நாளில் 164.5 கோடியும், 2ம் நாளில் 93.8 கோடியும், 3ம் நாளில் 115 கோடியும் என 388 கோடியாக உள்ளது. படக்குழுவின் கூற்றுப்படி உலகம் முழுவதும் 500 கோடியை வசூலித்துள்ளது.