இப்பதான் லோகேஷ்!.. நாங்க மங்காத்தாவிலே இத பண்ணிட்டோம்!.. விபி சொல்றத கேளுங்க!..
50,60,70களில் ஒரு புதிய படத்திற்கான விளம்பரம் என்பது நோட்டீஸ் அடித்து குதிரை வண்டியில் சென்று ஒலிப்பெருக்கி மூலம் படத்தின் பெயரை சொல்லி விளம்பரம் செய்து அந்த நோட்டீஸை எல்லோருக்கும் கொடுப்பார்கள். அதேபோல், எல்லா இடத்திலும் புதிய படம் பற்றிய போஸ்டர் ஒட்டுவார்கள்.
இப்போது வரை போஸ்டர் என்பது நடைமுறையில் இருக்கிறது. கிராமம், நகரம் என எல்லா பகுதியிலும் உள்ள தெருக்களில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு படம் தியேட்டரிலிருந்து தூக்குகிறார்கள் எனில் ‘இன்றே இப்படம் கடைசி’ எனவும் போஸ்டர் மீது ஒட்டுவார்கள். அதேபோல், புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது போஸ்டர்களில் விளம்பரம் கொடுப்பார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டது. எனவே, புதிய படங்களின் அறிவிப்பு டிவிட்டரில் வெளியிடுகிறார்கள். முன்பெல்லாம் டிஜிட்டல் போஸ்டர்களை தயார் செய்து பகிர்வார்கள்.
இப்போதெல்லாம், புதிய பட அறிவிப்பை ஒரு சிறிய வீடியோவாக உருவாக்கி வெளியிடுகிறார்கள். இதை துவக்கி வைத்தது லோகேஷ் கனகராஜ்தான். விக்ரம் படம் உருவானபோது கமலை வைத்து அப்படி ஒரு வீடியோவை உருவாக்கி வெளியிட்டார். அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற இப்போது எல்லோரும் அதை செய்ய துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஒரு படம் துவங்கும்போது அந்த நடிகரை வச்சி வீடியோவை உருவாக்கி அறிவித்தது முதலில் நாங்கள்தான். மங்காத்தா படத்தில் அதை செய்தோம். அதுக்கு முன்னாடி ஒரு நடிகரை வச்சி வீடியோவை உருவாக்கி (மோஷன் போஸ்டர்) ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியானதாக எனக்கு தெரியவில்லை. மங்காத்தா படத்தில் ஒரு சின்ன வீடியோவில் கதை சொல்வது போல ஷூட் செய்து பின்னணி இசையோடு வெளியிட்டோம்’ என சொல்லி இருக்கிறார்.