Viduthalai2 : விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல்... இத்தனை கோடியா?
வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது விடுதலை 2. படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர், அனுராக் காஷ்யப், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், சேத்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையின் தழுவல்.
படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா. படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். சத்யமங்கலம் காட்டுப்பகுதி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்திற்காக ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் படம் வெளியானதும் பாசிடிவ்வான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இந்த 2ம் பாகத்திலும் உள்ளது. என்றாலும் முதல் பாதி தொய்வாக உள்ளதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பெருமாள் வாத்தியாராக வரும் விஜய்சேதுபதி தத்துவங்களாக உதிர்க்கிறார் என்று விமர்சனம் வருகிறது. மற்றபடி படம் அருமையாக உள்ளது என்கிறார்கள்.
படத்தில் விஜய்சேதுபதி, மஞ்சுவாரியார் ஜோடியின் நடிப்பு பிரமாதமாக உள்ளது. முதல் பாகத்தில் குமரேசனாக வந்து சூரி கலக்கினார். அதில் விஜய்சேதுபதி கொஞ்சமாகவே வந்தார். ஆனால் இரண்டாம் பாகம் முழுக்க அவர்தான். அற்புதமாக நடித்துள்ளார்.
அவர் எப்படி உருவாகிறார்? தமிழர் மக்கள் படையை ஏன் உருவாக்கினார்? ஆயுதப் போராட்டம் அவருக்கு ஏன் தேவைப்பட்டது? மக்களுக்காக என்ன செய்தார் என்பது போன்ற தகவல்களை படம் சொல்கிறது. படத்தில் கம்யூனிசம் சற்று ஓங்கி ஒலிக்கிறது.
இது வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா என்றும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதே நேரம் படம் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக சொல்லப்பட்டுள்ளது அருமை. இளையராஜாவே 2 பாகங்களுக்கும் இசை அமைத்துள்ளார். பாடல்களில் மெலடி அருமை. தினம் தினமும், மனசுல ஆகிய பாடல்கள் நெஞ்சில் நிற்கின்றன.
தற்போது நேற்று வெளியான முதல் நாளில் மட்டும் விடுதலை 2 இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.7 கோடி வசூலித்துள்ளது.