120 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய நாகேஷ்.. பயந்த பாலசந்தருக்கு வச்ச பஞ்ச் டயலாக்!

By :  SANKARAN
Update: 2025-05-14 10:54 GMT

நாகேஷை வைத்து எதிர்நீச்சல், நீர்க்குமிழி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் கே.பாலசந்தர். இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் நாகேஷ். ரஜினி, கமலுக்கு நடிக்கத் தெரியாத போது நாகேஷைப் பார்த்துக் கத்துக்கோங்கடான்னு சொல்வாராம்.

அந்த அளவு நாகேஷ் மீது ஒரு நட்பையும், அன்பையும், பாசத்தையும் வைத்து இருந்தார் பாலசந்தர். அவரிடம் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு நாகேஷ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

நாகேஷைப் பத்தி நினைக்கும் போது எல்லாம் கண்ணுல தண்ணீ வந்துடும். நாகேஷ் வந்து ஒரு பிறவி நடிகன். அதாவது அவருக்கு எக்ஸ்ட்ராடினரி திங்கிங் இருக்கும். 'இப்படி வச்சிக்கலாமா பாலு, அப்படி வச்சிக்கலாமா பாலு'ன்னு ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பான். வச்சிக்கலாம். வச்சிக்கலாம். அதை அடுத்த நாளே கூட வச்சிக்கலாம்னு சொல்லி அவரை அமைதியாக்குவேன்.

இதுக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் வச்சிக்கணும். இதை விட்டு வெளியே போகக்கூடாது. அதை வேற எங்கயாவது வச்சிக்கோ. வேற எங்காவது நடிக்கப் போனா அங்க வச்சிக்கோ. இங்க வச்சிக்காதே. அல்லது நாம அடுத்த நாள் வரும்போது பண்ணிக்கலாம்னு சொல்லுவேன். அதனால நாகேஷ் மறக்க முடியாத நண்பனா வந்துட்டான்.


மறக்க முடியாத இழப்புன்னே சொல்லலாம். நான் டைரக்ட் பண்ணதை எல்லாம் பார்த்துட்டு 'நீ வந்து ஸ்ரீதர் மாதிரி பெரிய டைரக்டரா வருவே'ன்னு சொன்னான். இதை வந்து சோ ஒரு தடவை எங்கிட்ட சொன்னாரு. அவரு நாடகத்தை டைரக்ட் பண்ணும்போது சொன்னாரு. எனக்கு சினிமாவுல இன்ட்ரஸ்ட் கிடையாதுன்னு சொன்னேன்.

சர்வர் சுந்தரம் நாடகம் முதல் நாள் ஆரம்பிக்கும்போது நாங்க ரெண்டு பேரும்தான் கார்ல வர்றோம். நாகேஷ் என்னை வச்சி 120 கிமீ வேகத்துல காரை ஓட்டுறான். நான் 'எனக்கு பயமா இருக்கு'ன்னு சொன்னேன். அப்போ அவன் என்ன சொன்னான்னு தெரியுமா? 'பயப்படாதே பாலு. என் பக்கத்துல யாரை வச்சி ஓட்டிக்கிட்டுப் போறேன்னு தெரியுமா? எதிர்கால தமிழகத்தின் மிகச்சிறந்த டைரக்டர்' அப்படின்னு அவன் சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கு என கண்கலங்குகிறார் இயக்குனர் சிகரம் பாலசந்தர். 

Tags:    

Similar News