விஜயகாந்தை ரெக்கமண்ட் செய்த பாக்கியராஜ்!. ஆனாலும் நடித்தது வேற நடிகர்!.. ஒரு பிளாஷ்பேக்!..
Vijayakanth: ஒரு படத்தின் கதை உருவாகும்போதே யார் அதில் நடித்தால் சரியாக இருக்கும் என இயக்குனர் யோசித்துவிடுவார். 80களில் கோலிவுட்டில் நிறைய கதாசிரியர்கள் இருந்தார்கள். எனவே, பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் கதாசிரியர்களிடம் கதைகளை வாங்கி படமெடுப்பார்கள். பாரதிராஜா இயக்கிய எல்லா படங்களுமே கதாசிரியர்களின் கதைதான். ஆனால், அதை அழகாக எடுப்பார்.
80களில் செல்வராஜ், கலைஞானம், பஞ்சு அருணாச்சலம் போன்ற பல முக்கிய கதாசிரியர்களின் கதைகள் படங்களாக உருவாகியிருக்கிறது. ரஜினி நடித்து வெளிவந்த பட படங்களில் பஞ்சு அருணாச்சலம் கதை மற்றும் திரைக்கதை அமைத்திருப்பார். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படம் கூட அப்போது அவரிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் மணிவண்ணனின் கதைதான்.
பாரதிராஜாவின் உதவியாளர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். பாரதிராஜாவுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவரை நடிக்க வைத்துவிடுவார். அவர் புதிய வார்ப்புகள் படம் எடுத்தபோது இந்த படத்தில் நாம்தான் ஹீரோ என்பது பாக்கியராஜுக்கே தெரியாது. ‘நீ நடி’ என குரு பாரதிராஜா சொல்ல பாக்கியராஜ் ஏற்கவில்லை. இயக்கத்தில் மட்டுமே ஆர்வம். நடிப்பதில் ஆர்மில்லை என அவர் சொல்லியும் பாரதிராஜா விடவில்லை. இப்படித்தான் ஹீரோவாக மாறினார் பாக்கியராஜ்.
அந்த காலகட்டத்தில் வந்த திரைப்படம்தான் கன்னிப்பருவத்திலே. சூழ்நிலை காரணமாக சபலப்பட்டுவிடும் ஒரு பெண்ணை ஒருவன் அடைய முயற்சிக்கும் கதை. இதில், வடிவுக்கரசி கதாநாயகியாக நடிக்க அவரின் கணவராக ராஜேஷ் நடித்திருந்தார். மேலும், வடிவுக்கரசியை அடைய நினைக்கும் வேடத்தில் பாக்கியராஜ் நடித்திருந்தார். அதாவது வில்லன் வேடம்.
இந்த படத்தின் கதையை வைரவன் என்பவர் எழுத பி.வி.பாலகுரு இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்தது பாக்கியராஜ். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பாக்கியராஜ் ‘கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஷ் நடிக்க வேண்டிய வேடத்தில் நான் விஜயகாந்தைத்தான் சொன்னேன். ஆனால், இயக்குனர் ராஜேஷை தேர்ந்தெடுத்துவிட்டார்’ என சொல்லியிருக்கிறார்.
பின்னாளில் பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான சொக்கத்தங்கம் படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.