சோத்துக்கு வழியில்லாம அலைந்த கண்ணதாசன்... ஆனா ஒரே பாடலில் மாறிய வாழ்க்கை..!

By :  Sankaran
Update: 2024-12-16 03:30 GMT

kannadasan

கண்ணதாசன் கடந்து வந்த பாதை கரடுமுரடானது. அவ்வளவு எளிதில் அவர் ஒன்றும் கவியரசர் ஆகிவிடவில்லை. அவர் சுமைதாங்கி என்ற படத்துக்காக 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற பாடலை எழுதினார். இப்பாடலை அவரே இயக்கியும் உள்ளார்.

தான் வறுமையில் இருந்த கால கட்டத்தில் தான் சந்தித்த வலியை உணர்த்துவதற்காக இந்தப் பாடலை எழுதினார். தன்னை போலவே ஒரு நடிகரையும் அந்தப் பாடலில் நடிக்க வைத்துள்ளார் கண்ணதாசன். கண்ணதாசனை மெரினா பீச்சில் போலீஸ் அவமானப்படுத்தி விரட்டி அடிக்கிறார். அப்போது அவர் உணர்ந்த வலி தான் வார்த்தைகளாக விஸ்வரூபம் எடுத்தது. அதன் பிளாஷ்பேக் இதுதான்.

பாடல் ஆசிரியராக சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வந்த கண்ணதாசனுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார். எங்கு போவது? என்ன செய்வது என்றே அவருக்குத் தெரியவில்லை.


அந்த காலக்கட்டத்தில் ஒருநாள் இரவு பசியுடன் மெரினா கடற்கரையில் படுத்து தூங்கி விட்டார். அப்போது கண்ணதாசனை ஒரு போலீஸ் அதிகாரி வந்து எழுப்பியுள்ளார். 'இங்கு படுக்கக் கூடாது' என்று சொல்கிறார். அதற்கு 'வேலை தேடி சென்னை வந்தேன். எனக்கு இங்கு யாரையும் தெரியாது' என கண்ணதாசன் பதில் சொல்கிறார்.

இதை கேட்ட போலீஸ், 'யாரையும் தெரியாம எதுக்கு சென்னை வந்த? இங்கு படுக்க கூடாது. அப்படி படுக்க வேண்டும் என்றால் எனக்கு 25 பைசா கொடு' என்று கேட்டுள்ளார். இதற்கு அவர் 'என்னை வெட்டி போட்டாலும் என்னிட்டம் ஒரு பைசா இல்லை' என்று சொல்ல, 'அப்படியென்றால் இங்கே படுக்காதே..' என்று அந்த போலீஸ் அவமானப்படுத்தி விரட்டி அடிக்கிறார். ஒரு கவிஞருக்கே அதுவும் கவியரசருக்கே இந்த நிலைமையா என்று எண்ணிப்பாருங்கள்.

அப்போது கண்ணதாசன் மெரினாவில் இருக்கும் காந்தி சிலை வரை நள்ளிரவில் நடந்தே வந்துள்ளார். தான் சந்தித்த வலியை காட்சியாக மாற்ற நினைத்து கண்ணதாசன், அதற்காக ஒரு பாடலை எழுதி முடிக்கிறார். அதுதான் 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்' என்ற பாடல். இது இப்போது கேட்டாலும் மனதுக்கு இதமாக இருக்கும்.

அந்த பாடல் தான் 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்'ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான சுமைதாங்கி படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.

கண்ணதாசனுக்கு முதல் பாடல் கலங்காதிரு மனமே. இது 'கண்ணியின் காதலி' என்ற படத்திற்காக எழுதினார். ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து அவருக்கு மனதில் உதயமான பாடல் தான் அது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News