கடைசியாக சிவாஜியைப் பார்த்த இளையராஜா... அந்த ராஜநடை அப்படியாகி விட்டதாமே!
நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பல படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இருந்தாலும் அவரை முதன்முதலாக சந்தித்துப் பேசியது தீபம் படத்தின் பாடல்களுக்காகத்தான்.
அதன்பிறகு சிவாஜிக்கும் அவருக்கும் இருந்த உறவானது மிக நெருக்கமானதாக மாறி இருந்தது. பல நாள்கள் நண்பகலில் நடிகர்திலகம் சிவாஜியுடன் சேர்ந்து சாப்பிடும் வாய்ப்பைப் பெற்றவர் இளையராஜா.
அப்படிப்பட்ட இளையராஜா சிவாஜியைத் தான் கடைசியாக சந்தித்த பதிவைப் பற்றி ஒரு பத்திரிகையில் பகிர்ந்து கொண்டார். பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்திருந்த நேரம். உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் சிவாஜி. அப்போதுதான் வீடு திரும்பி இருக்கிறார். அவரை பார்ப்பதற்காக நான் சென்றபோது பவதாரிணியையும் உடன் அழைத்துச் சென்றேன்.
பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்ற செய்தியை சிவாஜியிடம் சொன்ன உடனே நல்லா இரு நல்லா இருன்னு வாழ்த்தினார். சிவாஜியின் ராஜநடையை நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்து ரசித்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட கலைஞர் தன் வீட்டில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்து இருந்ததைப் பார்த்தபோதே எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. மெலிந்திருந்த அவரது உடலைப் பார்த்த உடனே என் கண்களில் இருந்து கண்ணீர் தானாகக் கொட்ட ஆரம்பித்து விட்டது.
சிவாஜியும் பார்த்து விட்டார். 'என்ன ராஜா அண்ணன் இப்படி இருக்காரேன்னு கஷ்டப்படுறீயா? என்ன செய்றது? சாப்பாடே பிடிக்கல. சாப்பிட முடியல' என்றார் சிவாஜி. அதற்குப் பின்னால் பல நிமிடங்கள் நான் அங்கு இருந்தபோதும் என்னால இயல்பா பேச முடியல. நான் அவருக்கு ஆறுதல் சொல்வதற்குப் பதிலாக அவர் எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்.
அப்படி எவ்வளவு நேரம் அங்கேயே இருக்குறது? அவரும் என்னென்னவோ பேசிப் பார்த்தார். ஆனா அந்த மனநிலையில் இருந்து என்னால் விடுபட முடியவில்லை. தமிழ்சினிமாவின் மாபெரும் கலைஞரான அவரை அப்படிப்பட்ட தோற்றத்தில் என்னால் பார்க்க முடியவில்லை.
வெளியேறும்போது 'அண்ணே ரெஸ்ட் எடுத்துக்கோங்க. அப்புறம் வந்து பார்க்குறேன்'னு சொல்லிவிட்டு கிளம்பினேன். ஆனால் அதுதான் சிவாஜியுடனான எனது சந்திப்பு கடைசியாக இருக்கும் என்று அன்றைக்கு எனக்குத் தெரியாது என்று அதில் தெரிவித்து இருந்தார் இளையராஜா.