இது நடக்கும்போது சினிமால இருக்க மாட்டேன்!. பல வருடங்களுக்கு முன்பே சொன்ன விக்ரம்!...

By :  Murugan
Update: 2025-01-06 06:59 GMT

Chiyan Vikram: சினிமாவில் எப்படியாவது ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என பல வருடங்கள் போராடியவர் சியான் விக்ரம். மீரா, தந்து விட்டேன் என்னை என சில படங்களில் நடித்தார். ஆனால் அது கிளிக் ஆகவில்லை. மீரா படத்தின் பாடல்கள் ஹிட் ஆனதே தவிர படம் ஓடவில்லை. எனவே, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்கப்போனார் விக்ரம்.

மலையாளத்தில் சுரேஷ் கோபி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு தம்பியாக நடித்திருக்கிறார். ஆனால், தமிழில் பிரபலமான ஹீரோவாக மாற வேண்டும் என்கிற ஆசை அவரிடம் இருந்து வந்தது. அதோடு, வித்தியாசமான கெட்டப்புகளில், வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற தாகமும் அவருக்கு இருந்தது.


ஆனால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பிரபுதேவா, பிரபாஸ், வினித் போன்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து வந்தார். அஜித்துடன் உல்லாசம் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படமும் ஓடவில்லை. இடையில் பைக் விபத்தில் சிக்கி 3 வருடங்கள் படுக்கையில் இருந்தார். ‘இனிமேல் நீங்கள் நடக்கவே முடியாது’ என்று கூட மருத்துவர்கள் சொன்னார்கள்.

ஆனால், தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து மீண்டு வந்தார் விக்ரம். இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்த சேது படம் அவர் ஆசைப்பட்டதை துவங்கி வைத்தது. அதன்பின் தில், தூள், சாமி என ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக விக்ரம் மாறியிருக்கிறார்.


விக்ரமின் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பே டிவி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விக்ரம் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லியிருந்தார்.

ஒவ்வொரு நாளும் கண்ணாடி பார்க்கும்போது என் முகம் புதிதாக தெரிய வேண்டும் என நினைப்பேன். சினிமாவிலும் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களும் அப்படி அமைய வேண்டும் என்பதே என் ஆசை. அதனால்தான் காசி, பிதாமகன், சாமி போன்ற வித்தியாசமான வேடங்களில் நடித்தேன்.

என் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ‘விக்ரம் ஒரே மாதிரி இருக்கிறார்.. நடிக்கிறார்’ என்கிற எண்ணம் வந்துவிடக்கூடாது. பல வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. எப்போது ‘எல்லா வேடத்திலும் நடித்துவிட்டோம். இனிமேல் நடிக்க வேஷமே இல்லை’ என்று என்னைக்கு எனக்கு தோன்றுகிறதோ அன்றைக்கு சினிமாவில் நான் இருக்க மாட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

Tags:    

Similar News