கதை மேல நம்பிக்கை இருந்தா நடிங்க கார்த்திக்... இல்லன்னா..... கடுப்பான இயக்குனர்
தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான திரைக்கதை அம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் பல இயக்குனர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் தான் விக்ரமன். அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலானவை சூப்பர்ஹிட்தான்.
இவரது படங்கள் எல்லாமே நட்பு, காதல், குடும்பப்பாசம் என அனைத்துமே குடும்பப்பாங்கானப் படங்கள்தான். இவர் சமீபத்தில் யூடியூப் சானல் ஒன்றில் பேசியது வைரலாகி உள்ளது.
1998ல் இவர் இயக்கிய படம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். இந்தப் படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தில் கார்த்திக், ரோஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அஜீத் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதுகுறித்து விக்ரமன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
இந்தப் படத்திற்காக முதல் 3 நாள்கள் கார்த்திக் நடித்தார். படப்பிடிப்பு வாகினி ஸ்டூடியோவில் நடந்தது. 4வது நாளில் தயாரிப்பாளரை அழைத்தார். 'எனக்கு இந்தக் கதை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இது நான் நடிச்ச நந்தவன தேரு படம் மாதிரியே இருக்கு'ன்னு சொன்னாராம்.
சூட்டிங் நடந்து கொண்டே இருக்கு. தயாரிப்பு தரப்பில் இருந்து எனக்கு தகவல் வருகிறது. அன்று அவர் நடித்து முடித்ததும் மேக்கப் அறையில் இருந்தார். சூட்டிங் முடிச்சதும் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு நேராக அங்கே போனேன். 'என்ன சார் பிரச்சனை?'ன்னு கார்த்திக்கிடம் கேட்டேன்.
'எனக்கு என்னமோ இந்தப் படத்தோட கதையைப் பார்க்கும்போது நந்தவன தேரு மாதிரியே இருக்கு. அதிலும் நான் ஹீரோயினைப் பாடகியாக்குவேன்' என்று சொன்னார்.
உடனே 'அது வேறு. இது வேறு. இது பாடகி ஆக்குவது எல்லாம் கதை அல்ல. பாடகியாகி முன்னுக்கு வந்த ஒருவர் நான் இவனால தான் முன்னுக்கு வந்தேன்னு நன்றி சொல்ற கதை. நீங்க சொல்ற நந்தவன தேரு படத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. நம்பிக்கை இருந்தா நடிங்க.
இல்லாவிட்டால் இந்த தயாரிப்பாளர் உங்களை வைத்து வேறு படம் எடுத்துக் கொள்ளட்டும். நான் வேறு ஒரு ஹீரோவை வைத்து இந்தப் படத்தை 100 நாள்கள் ஓட வைக்கிறேன்'னு சவால் விட்டேன் என்கிறார் விக்ரமன். அதற்கு கார்த்திக் 'நீங்க இவ்வளவு நம்பிக்கையா இருந்தா நான் நடிக்கிறேன்'னு சொன்னாராம். அப்படித்தான் அந்த சூப்பர்ஹிட் படம் உருவானது.