சிவாஜி விழாவில் ரஜினி... ஜெயலலிதாவைப் பேசிய பேச்சால் மிரண்டு போன திரையுலகம்
செவாலியே என்றால் பிரெஞ்ச் மொழியில் மாவீரன் என்று அர்த்தம். பிரான்ஸ் நாட்டை ஆண்டவன் நெப்போலியன். இவரால் 1802ல் செவாலியே விருது வழங்கும் விழா தொடங்கியது. அப்படிப்பட்ட விருதை நடிகர்திலகம் சிவாஜிக்கு வழங்க பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அந்த நாட்டைச் சேர்ந்த 6 நீதிபதிகள் சிவாஜியின் 30 படங்களைப் பார்த்தனர்.
அதன்பிறகு சிவாஜியைத் தேர்வு செய்தனர். தொடர்ந்து சிவாஜிகணேசனைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியேவை வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதைப் பெற்றுக்கொள்ள பிரான்ஸ் வர முடியுமா என்றனர். அப்போது அங்கு போவதா வேணாமான்னு குழப்பத்தில் இருந்தார் சிவாஜி.
ஏனென்றால் அவருக்கு பல விருதுகள் ஏற்கனவே வந்து குவிந்து கிடந்தது. பத்திரிகைகள் அந்தச் செய்தியை வெளியிட்டு சிவாஜியைப் புகழ்ந்து தள்ளின. ஆனால் தமிழ்த்திரை உலகில் அந்த விருதைப் பற்றி யாருக்கும் தெரியாததால் பெரிய பரபரப்பு ஏற்படவில்லை.
அந்த சூழலில் ராதிகாவை சந்தித்த நண்பர் ஒருவர் செவாலியே விருது பற்றி தெளிவாக சொன்னார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்தை சந்தித்து இதுபற்றி அவர் எடுத்துக் கூறினார். தொடர்ந்து விழா எடுக்க முடிவு செய்தனர். அதற்குள் மலேசியா முந்திக்கொண்டது. அங்குள்ள கோலாலம்பூரில் செவாலியே சிவாஜிக்குப் பாராட்டு நடத்தியது.
தொடர்ந்து சென்னையில் 1995ல் சேப்பாக்கம் மைதானத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. கமல், ரஜினி உள்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். செவாலியே விருதும் அப்போது பிரான்ஸ் நாட்டின் தூதரால் வழங்கப்பட்டது.
அந்த விருது வழங்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் சிவாஜிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. அதன்பிறகு சிகிச்சை முடிந்ததும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது ரஜினி நன்றி உரை சொல்வதற்குத் தயாரானார். ஏற்கனவே கொடுத்த லிஸ்டைத் தூக்கி பையில் வைத்து விட்டு தான் பேச ஆரம்பித்தார்.
அதற்கு முன் சிவாஜியின் காலில் விழுந்து வணங்கி விட்டு பேசத் தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே இந்தியத் திருநாட்டின் இணையில்லா கலைஞனான சிவாஜியின் உடல் நலத்திற்காக நாம் ஒரு அரை நிமிடம் எழுந்து நின்று பிரார்த்தனை செய்வோம் என்றார்.
அவர் அப்படி சொன்னதுமே ஸ்டேடியத்தில் இருந்த மொத்த கூட்டமும் எழுந்து நின்றது. ரஜினியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தமிழக முதல்வரான ஜெயலலிதாவுக்கும் எழுந்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து பேசும்போது ஜெயலலிதாவைப் பார்த்து 'நீங்க பிலிம்சிட்டியைத் திறந்து வைத்த போதே அவரைக் கௌரவப்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால் அதை நீங்க செய்யல. அவரை மதிக்கல. அந்த விழா மேடையில் சிவாஜியை உட்கார வைத்து கௌரவப்படுத்தி இருக்க வேண்டும். அதையும் செய்யல. அது தப்பு. தப்பு செய்றது மனித குணம். அதைத் திருத்திக் கொள்வது மனித இயல்பு' என ஜெயலலிதாவை காரசாரமாக பேசினார்.
மொத்த கூட்டத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 'ஆனா அந்தத் தப்பை இப்போ நடந்த விழாவுல கலந்து கொண்டதன் மூலமா சரி பண்ணிட்டீங்க'ன்னு சொல்லி முடித்தார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.