தயாரிப்பாளருடன் 3 வருட பிரிவை தீர்த்து வைத்த படம்... சரியான நேரத்தில் பேசி சாதித்த எம்ஜிஆர்

By :  Sankaran
Update: 2024-12-21 15:00 GMT

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் படங்கள் என்றாலே இன்று வரை தனி மவுசுதான். அவரது ஸ்டைல், மேனரிசம், நடை, உடை, பாவனை என பல விஷயங்கள் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து விட்டன. அவரைப் போல இளம் நடிகர்கள் கூட பலரும் ஸ்டைலாக நடித்துப் பார்ப்பார்கள். மேடைக்கலைஞர்கள் என்றால் சொல்லவே வேணாம்.

இன்றும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய் என இவர்களை வைத்துத்தான் அவர்களுக்கே பொழைப்பு ஓடுகிறது. ஆடல் பாடல் என்றால் முதல் பாடலாக எம்ஜிஆர் போல வேடமிட்டு வந்து ஆடுவார்கள். சினிமாவில் எம்ஜிஆருக்கு அத்தனை விஷயங்களும் அத்துப்படி. அவருடைய இயக்கத்தில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படமே இதற்கு சாட்சி. அதே போல நாடோடி மன்னன் படத்தையும் சொல்லலாம்.


வாள் சண்டையில் பெரிய வித்தகர் எம்ஜிஆர். அந்த வகையில் எம்ஜிஆருக்கும், சாண்டோ சின்னப்பா தேவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. எம்ஜிஆரை வைத்து தேவர் 15க்கும் மேலான படங்களைத் தயாரித்துள்ளார். இடையில் ஒரு சின்ன மனக்கசப்பால் 3 வருடமாக இருவரும் பேசவே இல்லையாம்.

அந்த நேரம் மெஜஸ்டிக் ஸ்டூடியோவில் சின்னப்பா தேவர் தாய் சொல்லைத் தட்டாதே என்ற படத்துக்காக 2 பாடல்களை ரெக்கார்டிங் செய்தார். அந்தப் படத்தில் ஜெமினிகணேசனை நடிக்க வைக்க அப்போது பேச்சுவார்த்தையும் நடந்தது.

அந்த சமயம் அங்கு வந்த எம்ஜிஆர் தேவரிடம் 'என்ன படத்துக்கு அண்ணே ரெக்கார்டிங் நடக்குது?'ன்னு கேட்டுள்ளார். அதற்கு அவர் 'தாய் சொல்லைத் தட்டாதே' படம் என்று எம்ஜிஆரிடம் சொல்கிறார். 'ஹீரோ யாரு?'ன்னு கேட்கிறார். இன்னும் முடிவாகவில்லை என்கிறார்.


உடனே சற்றும் தாமதிக்காமல் எம்ஜிஆர், 'அண்ணே நான் நடிக்கட்டுமா அண்ணே'ன்னு கேட்டுள்ளார். அதற்கு தேவர் சொன்னது இதுதான். 'அதுக்கென்ன உங்களுக்கு இல்லாததா? நீங்க தாராளமா நடிங்க'ன்னு சொல்லி உற்சாகப் படுத்தியுள்ளார். அதன்படி எம்ஜிஆரும் நடிக்க, படமும் சூப்பர்ஹிட். அதன்பிறகு பிரிந்த நட்பு மீண்டும் சேர்ந்தது. 

1961ல் எம்.ஏ.திருமுருகன் இயக்கத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் வெளியான படம் தாய் சொல்லைத் தட்டாதே. இந்தப் படத்தை சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்தார். கேவி மகாதேவன் இசையில் பாடல்கள் அருமை. காட்டுக்குள்ளே திருவிழா, காட்டுராணி கோட்டையிலே, ஒருத்தி மகனை, பாட்டு ஒரு பாட்டு, பட்டு சேலை காத்தாட, பூ உறங்குது, போயும் போயும், சிரித்து சிரித்து ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

Tags:    

Similar News