பாசமலருக்காக வசனகர்த்தாவை விட்டுக் கொடுத்த தயாரிப்பாளர்... இந்த பெருந்தன்மை யாருக்காவது வருமா?
சின்னப்பா தேவரைப் பொருத்தவரை ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் மற்றவரின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டார். அவருடைய பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். யானைப்பாகனுக்குப் பணியாற்றிய போதுதான் அவருக்கு பாசமலர் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. யானைப்பாகன் சின்னப்பா தேவரின் படம். அதனால் அவரிடம் தயங்கி தயங்கி சிவாஜி படத்துக்கு வந்துள்ள வாய்ப்பை ஆரூர்தாஸ் சொன்னார்.
அருமையான வாய்ப்பு. ஒத்துக்கோன்னு சொன்னார் சின்னப்பா தேவர். இல்லங்க அவருடைய படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு எனக்கு மீண்டும் கூட வரலாம். உங்க படத்தை விட்டுட்டு அவரு படத்துக்கு நான் எப்படி எழுதுறதுன்னு கேட்டார் ஆரூர்தாஸ். இல்லப்பா நான் அடுத்து எடுக்கப்போறது ஆக்ஷன் படம். சிவாஜி படத்தை எடுக்குறது அருமையான டைரக்டர் பீம்சிங்.
அவரு குடும்பப்படங்களை எடுப்பதில் மிகப்பெரிய பெயர் பெற்றவர். நீயும் குடும்பப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் கில்லாடி. நீங்க இருவரும் சேர்ந்து அந்தப் படத்துல வேலை செஞ்சா நிச்சயமா அது ஹிட்டாகும். உனக்கும் அவரோட படத்துல பணியாற்ற தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். அதனால நீ தாராளமா பாசமலர் படத்துக்கு வசனம் எழுது. உன்னோட வளர்ச்சி தான் முக்கியம்.
எனக்கு அதுல எந்த வருத்தமும் இல்லன்னு ஆரூர்தாஸை வாழ்த்தி அனுப்பி வைத்தார். நம்மகிட்ட வேலை செய்றவங்க நம்ம படத்துக்குத் தான் வசனம் எழுதணும்னு பலபேர் நினைப்பாங்க. ஆனா அவங்கள்ல இருந்து மாறுபட்டு மனிதருள் மாணிக்கமாக அவங்களை வாழ்த்தி அனுப்பி வச்சவருதான் சாண்டோ சின்னப்பா தேவர்.
சிவாஜி நடித்த பாசமலர் படம் வெள்ளி விழா கண்டது. தொடர்ந்து அவரது 28 படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றார் ஆரூர்தாஸ். அவற்றில் படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், புதிய பறவை, தெய்வ மகன், அன்னை இல்லம் ஆகிய படங்களுக்கும் இவர் ஆரூர்தாஸ்தான் வசனகர்த்தா.
எம்ஜிஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். நீதிக்குப் பின் பாசம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தாய்க்குத் தலைமகன், குடும்பத்தலைவன், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.